ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 67வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய மும்பை அணி லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு துஷாரா வேகத்தில் தேவ்தூத் படிக்கல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் கேப்டன் கேஎல் ராகுல் நிதானமான விளையாடினார். அவருடன் அடுத்ததாக வந்து ஜோடி சேர்ந்த மார்க்கட் ஸ்டோய்னிஸ் 2வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 28 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை அவுட்டாக்கிய பியூஸ் சாவ்லா அடுத்ததாக வந்த தீபக் ஹூடாவையும் 11 (9) ரன்களில் அவுட்டாக்கினார். போதாக்குறைக்கு மறுபுறம் கேஎல் ராகுல் திணறலாக பேட்டிங் செய்ததால் லக்னோ 69/3 என தடுமாறியது.
வெளுத்த பூரான்:
ஆனால் அப்போது வந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஸ்டைலில் முதல் பந்திலிருந்தே மும்பை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கத் துவங்கினார். அதே வேகத்தில் பட்டைய கிளப்பிய அவர் வெறும் 19 பந்துகளில் அரை சதமடித்து லக்னோவை அதிரடி பாதைக்கு அழைத்து வந்தார். அப்படி தமக்கு அடுத்ததாக வந்தவர் வெளுத்து வாங்குவதை பார்த்த கேஎல் ராகுலும் ஒரு கட்டத்திற்கு பின் உத்வேகமடைந்து தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார்.
அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு வெறும் 44 பந்துகளில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோவை மீட்டெடுத்த இந்த ஜோடியில் நிக்கோலஸ் பூரான் 5 பவுண்டரி 8 சிக்சருடன் 75 (29) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே மறுபுறம் 55 (41) ரன்கள் குவித்த கேஎல் ராகுலும் அவுட்டாகி சென்றார். இறுதியில் அர்சத் கான் டக் அவுட்டானாலும் ஆயுஸ் பதோனி 22* (10), க்ருனால் பாண்டியா 12* (7) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் லக்னோ 214/6 ரன்கள் எடுத்தது.
மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து இப்போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்கும் முனைப்புடன் மும்பை விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் 19 பந்துகளில் 50 ரன்கள் அடித்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய ஐபிஎல் கேரியரில் இதுவரை மொத்தம் 3 முறை 20 பந்துகளுக்குள் அரை சதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே’வில் தோனி இருப்பது எங்களுக்கு ரொம்ப நல்லது.. நாக் அவுட்டெல்லாம் எங்களுக்கு சாதரணம்.. ஸ்வப்னில் சிங்
இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 20 பந்துகளுக்குள் அரை சதமடித்த வீரர் என்ற தனித்துவமான சரவெடி சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் ஹைதெராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் டெல்லி அணியின் ஜேக் பிரேசர்-மெக்குர்க் ஆகியோரும் தலா 3 முறை 20 பந்துகளுக்குள் அரை சதமடித்துள்ளனர்.



