ஐபிஎல் 2023 : மீண்டும் கோப்பையை வெல்ல குஜராத் டாட்டா காட்ட வேண்டிய வீரர்களின் பட்டியல்

GT
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத போதிலும் ஹர்திக் பாண்டியா தலைமையில் குறைவான நட்சத்திர வீரர்களுடன் அட்டகாசமாக செயல்பட்ட குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி பைனலுக்கு சென்று சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைத்துள்ளது உண்மையாகவே பாராட்டுக்குரிய அம்சமாகும். அந்த அணியில் பெரும்பாலான போட்டிகளில் ஹர்திக் பாண்டியா உட்பட 5 – 8 வீரர்கள் மட்டுமே தொடர்ச்சியாக கச்சிதமாக செயல்பட்டதால் இந்த வெற்றி சாத்தியமானது.

இந்த முதல் வருடத்திலேயே கோப்பையை முத்தமிட்டுள்ளதால் அடுத்த வருடம் அந்த அணி மீது அனைவரின் பார்வையும் இருக்கும். எனவே அந்த அழுத்தத்தையும் தாங்கி கோப்பையை தக்க வைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன் இந்த வருடமே சுமாராக செயல்பட்ட ஒருசில வீரர்களை கழற்றி விட வேண்டிய நிர்பந்தமும் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. விஜய் சங்கர்: கடந்த 2014 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர், தினேஷ் கார்த்திக் போன்ற தமிழக வீரர்களுக்கு மத்தியில் தமிழக ரசிகர்களின் மானத்தை வாங்கும் வகையில் சுமாராகவே செயல்பட்டு வருகிறார். இவரின் கேரியரில் 2019இல் 15 போட்டிகளில் வெறும் 244 ரன்களை 20.33 என்ற மோசமான சராசரியில் எடுத்ததே உச்சபட்சமாகும்.

ஆனாலும் இவரை 1.40 கோடிக்கு நம்பி வாங்கிய குஜராத் ஆரம்பத்திலேயே 4 போட்டிகளில் வாய்ப்பளித்த போதிலும் 4, 13, 2, 0 என வெறும் 19 ரன்களை மட்டுமே எடுத்து மேலும் வாய்ப்பை கொடுக்க முடியாத அளவுக்கு மோசமாக செயல்பட்டார். எனவே அடுத்த வருடம் குஜராத் கழற்றி விட முதல் வீரராக இவர் நிற்கிறார்.

- Advertisement -

2. மேத்தியூ வேட்: கடந்த 2011 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் களமிறங்கி சுமாராக செயல்பட்டு காணாமல் போன இவர் கடந்த 2021 ஆஸ்திரேலியா வென்ற ஐசிசி டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி போன்ற முக்கிய போட்டிகளில் துருப்புச் சீட்டாக செயல்பட்டதால் 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் மீண்டும் கால்தடம் பதித்தார்.

2.40 கோடிக்கு வாங்கப்பட்டு குஜராத் கொடுத்த 10 போட்டிகளில் வெறும் 157 ரன்களை 15.70 என்ற மோசமான சராசரியில் 113.77 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவர் இந்திய ஆடுகளங்களில் தடுமாறக்கூடிய வெளிநாட்டு வீரர்களில் ஒருவராகக் காணப்படுகிறார். மேலும் டாப் ஆர்டரில் களமிறங்கி சுமாராக செயல்பட்டதால் பெரும்பாலான போட்டிகளில் அதை சரி செய்ய வேண்டிய பாரம் ஹர்டிக் பாண்டியாவின் மேலே விழுந்தது. எனவே அடுத்த வருடம் இவரை விடுவித்து வேறு தரமான வீரர்களை குஜராத் வாங்கலாம்.

- Advertisement -

3. வருண் ஆரோன்: 2011 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் ஒருமுறைகூட தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசாத இவர் இந்த வருடம் 2 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை 10.40 என்ற மோசமான எகானாமியில் எடுத்து கொஞ்சம்கூட மாறவில்லை என்று நிரூபித்தார். எனவே இவரையும் விடுவித்து வேறு நல்ல தரமான பவுலர்களை குஜராத் வாங்கலாம்.

4. அல்சாரி ஜோசப்: 2019இல் மும்பைக்காக அறிமுகப் போட்டியில் அசத்தி காயத்தால் வெளியேறிய இவர் இந்த வருடம் குஜராத்துக்காக 2.40 கோடிக்கு பங்கேற்ற 9 போட்டிகளில் 7 விக்கெட்களை 8.80 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

மேலும் லாக்கி பெர்குசன், யாஷ் தயாள் போன்ற பந்துவீச்சாளர்கள் ஷமிக்கு கைகொடுக்க காத்திருப்பதால் இவரை விடுவிப்பது சரியானதாக இருக்கும்.

5. குர்க்ரீட் சிங் மன்: கடந்த 2012 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் இந்த வருடம் குஜராத்துக்கு 1 போட்டியில் கூட களமிறங்கவில்லை என்றாலும் எப்போதுமே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதில்லை.

மேலும் ராகுல் திவாடியா போன்ற சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் இவரையும் தாராளமாக அந்த அணி நிர்வாகம் விடுவித்து வேறு நல்ல வீரர்களை வாங்கலாம்.

6. ஜயந் யாதவ்: 1.70 கோடிக்கு வாங்கப்பட்ட இவரும் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் வரலாற்றில் சுமாராக செயல்பட்டுள்ள நிலையில் ரசித் கான், ராகுல் திவாடியா, சாய் கிசோர் போன்ற பவுலர்கள் இருப்பதால் இவரை விடுவித்து வேறு துறைக்கான வீரர்களை வாங்கலாம்

சந்தேக பட்டியல்:
1. டேமினிக் ட்ரேக்ஸ்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டராக இருக்கும் இவர் 1.10 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்டியா இருந்ததால் இந்த வருடம் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

இதற்கு முன் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிலும் 24 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை 9.39 என்ற சுமாரான எக்கனாமியில் தான் எடுத்துள்ளார். எனவே பாண்டியா இருப்பதால் இவரை விடுவித்து வேறு ஏதேனும் ஆல் ரவுண்டர்களை வாங்கும் முடிவை குஜராத் எடுத்தால் நல்லதாகவே அமையும்.

2. பிரதீப் சங்வான்: கடந்த 2008 முதல் இதுவரை 9 சீசன்களில் விளையாடியுள்ள இவர் இப்படி ஒரு பவுலர் இருக்கிறார் என்று ரசிகர்கள் அறிய முடியாத அளவுக்கு எப்போதும் சிறப்பாக செயல்பட்டதில்லை.

இந்த வருடம் 3 போட்டிகளில் பங்கேற்ற இவர் 3 விக்கெட்களை 7.22 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்தாலும் முஹம்மது ஷமி, யாஷ் தயால் போன்ற பவுலர்கள் இருப்பதால் இவரை விடுத்து வேறு ஏதேனும் நல்ல பவுலரை ரிசர்வ் வீரராக குஜராத் வாங்கலாம்.

Advertisement