ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் மெகா அளவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 590 வீரர்களில் தரமானவர்களை வாங்க அனைத்து அணிகளும் பல கோடி ரூபாய்களுடன் காத்திருக்கின்றன.

இம்முறை அனைத்து அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளதால் தங்களின் விருப்பமான அணிக்கு அணிக்கு எந்தெந்த வீரர்கள் புதிதாக விளையாட போகிறார்கள் என்பதை காண ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர், டேவிட் வார்னர் போன்ற நட்சத்திர வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகி சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டர் 19 சாம்பியன் இந்தியா:
கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று முடிந்த ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை 2022 தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்று சாதனை படைத்தது. வரலாற்றில் 14-வது முறையாக நடைபெற்ற இந்த உலக கோப்பையில் டெல்லியைச் சேர்ந்த இளம் வீரர் “யாஷ் துள்” தலைமையிலான இந்தியா 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று உலக சாதனை படைத்தது.

அந்த உலக கோப்பையில் அசத்திய கேப்டன் யாஷ் துள், ராஜ் பாவா போன்ற இளம் இந்திய வீரர்கள் இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளதால் அவர்களையும் வாங்க ஐபிஎல் அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முக்கியமான சில இளம் இந்திய வீரர்கள் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் விதிமுறை:
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரர்களும் குறைந்தபட்சம் ஒரு உள்ளூர் அல்லது லிஸ்ட் ஏ எனப்படும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி இருக்க வேண்டும். அந்த வகையில் ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரில் இடம் பிடித்திருந்த ஷாய்க் ரஷீத், தினேஷ் பானா, ரவிக்குமார், நிஷாந்த் சித்து, சித்தார்த் யாதவ், அக்ரிஸ் ரகுவன்ஷி, கர்வ் சங்வான், மாணவ் பரக் ஆகிய 8 இந்திய வீரர்கள் இதற்கு முன் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது.

எனவே இவர்களால் விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஷைக் ரஷீத் ஒரு அற்புதமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். தினேஷ் பானா கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை பெற்ற இளம் விக்கெட் கீப்பராக காணப்படுகிறார். ரவிக்குமார் மிகச் சிறப்பான இடது கை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டார். இத்துடன் அக்ரிஸ் ரகுவன்ஷி என மேற்குறிப்பிட்ட 8 வீரர்களுமே தனித்துவம் வாய்ந்த திறமை கொண்டவர்கள் என்றாலும் ஐபிஎல் ஏலத்தில் அவர்கள் பங்கேற்க முடியாததால் அவர்களின் திறமை இந்த வருடம் வெளிவராமலேயே போக உள்ளது.
அடுத்த வருடம்:
அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கிந்திய தீவுகளில் இருந்து தாயகம் திரும்பி உள்ளார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு தலா 40 லட்சம் பரிசுத் தொகையை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் அறிவித்திருந்தார். இவர்களில் நிறைய வீரர்கள் ரஞ்சி கோப்பை 2022 தொடரில் பங்கேற்க அந்தந்த மாநில அணிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

பொதுவாகவே ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதிலும் உருவாகும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்க்கும் வண்ணமாகவே ஒவ்வொரு வருடமும் மினி மற்றும் மெகா ஐபிஎல் ஏலங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் விதிமுறை காரணமாக முக்கியமான இளம் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரும் சீசனுக்குள் மேற்குறிப்பிட்ட வீரர்கள் ஏதேனும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என நம்பலாம்.



