ஐபிஎல் 2023 : அடுத்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு ராஜஸ்தான் நீக்க வேண்டிய 6 வீரர்கள் – லிஸ்ட் இதோ

RR
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் லீக் சுற்றில் சீரான வெற்றிகளைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு சென்று அசத்தியது. அதன்பின் நாக் அவுட் சுற்றில் குவாலிஃபயர் 1 போட்டியில் தோற்றாலும் கூட மீண்டும் குவாலிபயர் 2 போட்டியில் பெங்களூவை சாய்த்து 13 வருடங்கள் கழித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பாண்டியா தலைமையில் முதல் வருடத்தில் புயலாக வந்த குஜராத்திடம் டாஸ் வென்றும் சேசிங் செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்து சொதப்பிய அந்த அணி இத்தனை வருடங்கள் கழித்து தவமாக பெற்ற பைனலில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

ஆனாலும் சமீப காலங்களில் நாக் அவுட் சுற்றுக்கு செல்வதற்கே திணறிய அந்த அணி இம்முறை ஃபைனல் வரை சென்றது பாராட்டுக்குரியதாகும். அந்த அணிக்கு பேட்டிங்கில் 90% ரன்களை ஜோஸ் பட்லர் அடிக்க சஞ்சு சாம்சன், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் அவ்வப்போது அடித்து காப்பாற்றியதால் பைனல் வரை சென்றது. அதேபோல் பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா, சஹால் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் எஞ்சிய பவுலர்கள் அவர்களுக்கு கைகொடுக்க தவறினர்.

- Advertisement -

13 வருடங்கள் கழித்து கோப்பையை நெருங்கிய அந்த அணி இம்முறை கற்ற தோல்வி பாடத்தை மனதில் வைத்து அடுத்த 2023 சீசனில் கோப்பையை வெல்ல மீண்டும் போராட உள்ளது. ஆனால் அதற்கு இம்முறை பின்னடைவை ஏற்படுத்திய ஒருசில வீரர்களை அந்த அணி கழற்றிவிட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளதை பற்றி பார்ப்போம்.

1. ராசி வேன் டெர் டுஷன்: மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார் என்ற நோக்கத்தில் 3 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும் வெறும் 22 ரன்களை மட்டுமே எடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் முழுமையான வாய்ப்பை வழங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. மேலும் ஹெட்மயர் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் இவரை அந்த அணி நிர்வாகம் யோசிக்காமல் நீக்கலாம்.

- Advertisement -

2. தேவ்தூத் படிக்கல்: 7.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் முழுமையாக 17 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் 376 ரன்களை 22.12 என்ற சுமாரான சராசரியில் 122.88 என்ற சுமாரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். பெரும்பாலான போட்டிகளில் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர் மிடில் ஆர்டரை வலுப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் மெதுவாக பேட்டிங் செய்து பின்னடைவையே கொடுத்தார்.

கடந்த 2 வருடங்களில் பெங்களூரு அணிக்காக 400க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அசத்திய இவர் இம்முறை சுமாராக செயல்பட்டதால் வேறு ஏதேனும் அதிரடி வீரர்களை ராஜஸ்தான் வாங்கும் முடிவை எடுக்கலாம்.

- Advertisement -

3. ஓபேத் மெக்காய்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர் இந்த வருடம் அறிமுகமாக களமிறங்கி குவாலிபயர் 2 போட்டி போன்ற ஒருசில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி தாக்கத்தை ஏற்படுத்தினார். இருப்பினும் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 9.17 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்த அவர் டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்னா ஆகிய இதர 2 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்படவில்லை.

குறிப்பாக டெல்லிக்கு எதிராக ரோவ்மன் போவெலுக்கு எதிராக இடுப்புக்கு மேலே நோ-பால் வீசியும் அம்பயர் புண்ணியத்தால் தப்பிய இவர் ஃபைனலில் 3.1 ஓவரில் 26 ரன்களைக் கொடுத்து சுமாராகவே செயல்பட்டார். எனவே இவரை விடுவித்து வேறு யாரையாவது 3-வது தரமான பவுலராக பந்துவீச ராஜஸ்தான் வாங்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

4. கருண் நாயர்: 2014இல் 11 இன்னிங்ஸ்சில் 330 ரன்கள் எடுத்தது தவிர பெரும்பாலான வருடங்களில் சுமாராகவே செயல்பட்டு வரும் இவருக்கு இந்த வருடம் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் வகையில் 3 போட்டிகளில் ராஜஸ்தான் வாய்ப்பளித்தது.

அதில் 2 இன்னிங்சில் களமிறங்கிய இவர் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறினார். மேலும் 30 வயதை கடந்துள்ள இவர் வரலாற்றில் ஒரு முறை கூட தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்ததில்லை என்ற சூழ்நிலையில் தாராளமாக இவரை ராஜஸ்தான் விடுவிக்கலாம்.

5. டார்ல் மிட்சேல்: அவரைப்போலவே மிடில் ஆர்டரை வலு சேர்க்கும் முயற்சியில் 2 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்ட நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் அதில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இவர் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 75.00 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் சுமாராக பேட்டிங் செய்ததால் அடுத்த வருடம் இவரை மீண்டும் வாங்காமல் இருப்பது நல்லது.

6. நவ்தீப் சைனி: கடந்த 2019 முதல் பெங்களூர் அணியில் வள்ளல் பரம்பரையாக பந்து வீசி வந்த இவரை 2.60 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் 2 போட்டிகளில் வாய்ப்பளித்தது.

அதில் 3 விக்கெட்டுக்களை எடுத்தாலும் 12.00 என்ற மோசமான எக்கனாமியில் பந்துவீசிய இவர் “நான் கொஞ்சம் கூட மாறவில்லை” என்று தெளிவாக காட்டினார். மேலும் இவரின் இடத்தில் பிரஸித் கிருஷ்ணா அசத்தியதால் அடுத்த வருடம் இவரை கழற்றி விட்டால் தவறில்லை.

7. ரியன் பராக்: இவருக்கு அடுத்த வருடம் வாய்ப்பளிக்க உள்ளதாக ராஜஸ்தான் அறிவித்துள்ளது. 20 வயது மட்டுமே நிரம்பிய இவர் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த நிலையில் இந்த வருடம் 3.80 கோடிக்கு மீண்டும் வாங்கபட்டார். ஆனால் இந்த 4 வருடங்களில் 37 இன்னிங்சில் 522 ரன்களை 16.84 என்ற மோசமான எக்கனாமியில் 124.88 என்ற மோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வரும் இவர் சிறுபிள்ளைத்தனமாக வாய்ப்புகளை வீணடித்து வருகிறார்.

Riyan Parag

இந்த 4 வருடங்களில் வெறும் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்துள்ள இவர் என்னமோ விராட் கோலியை போல் உலக சாதனை படைத்தது போல் அம்பயர்களை கலாய்ப்பது, அறிவுரை வழங்கும் ஜாம்பவான்களை ஏளனமாகப் பேசுவது என்று செயலில் காட்டாமல் வாயில் மட்டும் பேசுவது தான் அனைவரையும் கடுப்பாக வைத்துள்ளது. இவரை ராஜஸ்தான் மீண்டும் தக்க வைத்தாலும் அந்த வாய்ப்புக்கு தகுதியில்லாதவர் என்பதே நிதர்சனமாகும்.

Advertisement