உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 முறை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. பொதுவாக டி20 கிரிக்கெட் என்றாலே விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களை விட அதிரடியான சிக்சர்களை பறக்கவிட்டு ரன் மழை பொழியும் பேட்ஸ்மேன்களையே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மைதானத்திற்கு நேரடியாக சென்று போட்டியை பார்க்கும் ரசிகர்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு பேட்ஸ்மேன் பிரம்மாண்ட சிக்சர் அடித்து பந்தை கையில் கொடுக்க மாட்டாரா என்ற ஏக்கத்துடன் காத்துக் கிடப்பார்கள்.
அந்த வகையி்ல் டி20 உலகக்கோப்பை என்றதுமே கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் விஸ்வரூபமெடுத்து 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட்டு உலக சாதனை படைத்த இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யுவராஜ் சிங் செய்த சம்பவமே அனைவரது நினைவுக்கு வரும். அப்போட்டியில் மைதானத்தின் நாலா புறங்களிலும் சிக்சர்களை பறக்கவிட்ட அவர் அந்தப் போட்டியில் பெரிய சிக்சரை அடிக்கவில்லை.
முறியடிக்க முடியுமா:
மாறாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த அரையிறுதியில் 70 (30) ரன்களை விளாசிய போது பிரட் லீ வீசிய பந்தில் அசால்ட்டாக 119 மீட்டர் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விட்டு டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக தூரம் சிக்சர் அடித்த பேட்ஸ்மேனாக இன்றும் சாதனை படைத்துள்ளார். அந்த பெரிய சிக்சரை எளிதில் முறியடிப்பது கடினம் என்றாலும் இந்த தொடரில் அதைவிட பெரிய சிக்சரை பறக்கவிட்டு சாதனை படைக்க வாய்ப்புள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்:
6. ரோவ்மன் போவல்: பொதுவாகவே பெரிய சிக்சர்களை அடிப்பதற்கு நல்ல உடல் தகுதி இருப்பது அவசியமாகும். அந்த வகையில் இளம் வீரராக இருந்தாலும் அதிரடியான சிக்சர்களை பறக்கவிடும் உடல் தகுதியும் திறமையும் கொண்டுள்ள வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர் ஐபிஎல் 2022 தொடரில் எக்ஸ்பிரஸ் பவுலராக கருதப்படும் உம்ரான் மாலிக் பந்தில் 102 மீட்டர் சிக்ஸர் அடித்திருந்தார். மேலும் 130 சிக்ஸரை அடிப்பதற்கு முயற்சித்ததாக அப்போட்டியின் முடிவில் தெரிவித்திருந்த அவர் ஆஸ்திரேலியாவில் அதை செய்வதற்கு வாய்ப்புள்ளது.
5. டிம் டேவிட்: சிங்கப்பூரைச் சேர்ந்த இவர் இந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் உலக கோப்பையில் விளையாட உள்ளார். மிடில் ஆர்டரில் பெரிய சிக்சர்களை பறக்கவிடும் திறமை பெற்றுள்ள இவர் 2022 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் பந்தில் 114 மீட்டர் மெகா சிக்சரை பறக்க விட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்த போட்டியிலும் 110 மீட்டர் சிக்சரை பறக்க விட்ட இவர் உலகக் கோப்பையில் இன்னும் அதிக தூரத்தில் அடிக்க வாய்ப்புள்ளது.
4. டேவிட் மில்லர்: மிடில் ஆர்டரில் களமிறங்கி செட்டிலாகி விட்டால் தோற்க வேண்டிய போட்டியையும் அசால்டாக வென்று கொடுக்கும் திறமை பெற்றுள்ள இவர் தற்சமயத்தில் முரட்டுத்தனமான பார்மில் உள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். அதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்கனவே 100 சிக்ஸர்களை அடித்த அனுபவம் கொண்ட ஏதேனும் ஒரு பரபரப்பான போட்டியில் முழு பவரை காட்டினால் நிச்சயம் அந்த பந்து பெரிய சிக்சராக மாற அதிக வாய்ப்புள்ளது.
3. ஜோஸ் பட்லர்: இங்கிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான இவர் ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்களை குவித்து ரன் மழை பொழிந்த போது 107, 105 மீட்டர்களை கொண்ட சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 45 சிக்சர்களை பறக்கவிட்டார். அந்த வகையில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் இவரும் ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட சிக்சர் அடிக்க வாய்ப்புள்ளது.
2. சூர்யாகுமார் யாதவ்: சில நேரங்களில் லேசான பவருடன் கச்சிதமான டைமிங் கொடுத்தாலே ராக்கெட் போல பந்து பறப்பதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்சமயத்தில் உச்சகட்ட பார்மில் இருக்கும் இவர் தொட்டாலே பறந்த சிக்சர்களை சமீபத்திய போட்டிகளில் பார்த்தோம்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டரில் 50 சிக்சர்களை அடித்த முதல் பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ள அவர் நிச்சயமாக ஆஸ்திரேலியாவில் பெரிய சிக்சர்களை அடிக்கும் திறமை பெற்றுள்ளார்.
1. லியம் லிவிங்ஸ்டன்: உலக அளவில் தற்சமயத்தில் பிரம்மாண்ட சிக்சரை பறக்க விடும் திறமை பெற்றவராக இவர் திகழ்கிறார் என்றே கூறலாம். ஏனெனில் கடந்த வருடம் சொந்த மண்ணில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய பந்தில் 122 மீட்டர் முரட்டு சிக்சரை பறக்க விட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரிலும் முகம்மது சமி பந்தில் 117 மீட்டர் சிக்சரை அடித்தார்.
அப்படி அசால்டாக சிக்சர்களை அடிக்கும் திறமையை பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பையிலும் பெரிய சிக்சரை அடித்து யுவராஜ் சிங் சாதனையை உடைக்க வாய்ப்புள்ளது.



