ஐபிஎல் 2023 : சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க குஜராத் தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல்

Gujarat Titans GT Champ
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நேற்று முளைத்த காளானாக கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி நேரடியாக பைனலுக்கு சென்று கோப்பையை அதுவும் சொந்த மண்ணில் வென்றது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறைவான நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் அந்த முக்கிய வீரர்கள் அனைவரும் பெரும்பாலான போட்டிகளில் கச்சிதமாக செயல்பட்டதே இந்த எதிர்பாராத வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

அதேபோல் அனுபவமில்லாத இளம் வீரர்களும் முக்கிய நேரங்களில் சொதப்பாமல் அபாரமாக செயல்பட்டனர். மொத்தத்தில் முதல் வருடத்திலேயே எதிர்பார்ப்புகளின்றி சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ள குஜராத் 2023 சீசனில் கோப்பையை தக்க வைக்கும் மிகப்பெரிய பொறுப்பில் ஈடுபட உள்ளது. அதற்காக அந்த அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. ஹர்டிக் பாண்டியா: சமீப காலங்களில் காயத்தால் பந்து வீசாமல் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டு இந்திய அணியில் தனக்கான இடத்தை இழந்து நின்ற இவர் குஜராத்துக்காக 15 கோடிக்கு கேப்டன் வாங்கப்பட்டதும் முற்றிலும் புதிய பாண்டியாவாக செயல்பட்டார். ஏனெனில் இதற்கு முன் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த இவர் கேப்டன் பொறுப்பேற்றதும் 3-வது இடத்தில் களமிறங்கி பெரும்பாலான போட்டிகளில் பேட்டிங்கை சரிய விடாமல் சிறப்பாக பேட்டிங் செய்து தூக்கிப் பிடித்தார்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது சமி போன்ற பவுலர்கள் தடுமாறினால் அதை ஈடு செய்யும் அளவுக்கு தேவையான நேரங்களில் பந்துவீசிய இவர் மொத்தம் 15 இன்னிங்சில் 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளை எடுத்து ஒரு ஆல்-ரவுண்டராக அசத்தினார். குறிப்பாக பைனலில் 3 விக்கெட்டுகள் 34 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்று குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பில் இளம் வீரர்களையும் மூத்த வீரர்களையும் சிறப்பாக வழிநடத்தி முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார். எனவே இவரை குஜராத் நிர்வாகம் முதல் ஆளாக மீண்டும் தக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

2. ரசித் கான்: உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக வலம் வரும் இவரை பாண்டியாவுக்கு இணையான 15 கோடிக்கு குஜராத் வாங்கியது. அதற்கேற்றார்போல் 16 இன்னிங்சில் 19 விக்கெட்டுகளை 6.60 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்த இவர் அந்த அணி பந்து வீச்சில் ஆணிவேராக திகழ்கிறார்.

அதேபோல் பேட்டிங்கிலும் ஒருசில போட்டிகளில் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட்டிங் செய்து எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். எனவே தங்கமாக செயல்பட்ட இவரை அந்த அணி நிர்வாகம் வெளியே விடக்கூடாது.

- Advertisement -

3. டேவிட் மில்லர்: கடந்த 2012 முதல் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் மிரட்டலாக பேட்டிங் செய்து “கில்லர் மில்லர்” என்று ரசிகர்களால் பெயர் பெற்ற இவர் இந்த வருடம் குஜராத்தின் சாம்பியன் வெற்றியில் வாங்கிய 3 கோடி சம்பளத்திற்கு இரு மடங்கு சிறப்பாக செயல்பட்டார்.

ஆம் பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து பினிஷிங் செய்து கொடுத்த இவர் 16 போட்டிகளில் 481 ரன்களை 68.71 என்ற அபாரமான சராசரியில் 142.73 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார். இந்த ரன்கள் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் என அனைத்துமே அவரின் கேரியரில் இந்த வருடம்தான் உச்சத்தை தொட்டுள்ளது. எனவே அடுத்த வருடம் கண்டிப்பாக இவரையும் கோப்பையை தக்க வைக்க குஜராத் தக்கவைக்க வேண்டும்.

- Advertisement -

4. சுப்மன் கில்: பாண்டியா, ரசித் கான் ஆகியோருக்கு அடுத்ததாக 8 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் அடிக்கவில்லை என்றாலும் பொறுப்புடனும் நிதானமாகவும் பேட்டிங் செய்து டாப் ஆர்டரில் வலு சேர்த்தார்.

பைனலில் எடுத்த 42* ரன்கள் உட்பட மொத்தம் பங்கேற்ற 16 போட்டிகளில் 4 அரை சதங்கள் உட்பட 483 ரன்களை 34.50 என்ற சிறப்பான சராசரியில் 132.33 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவர் 2019இல் சிறந்த வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற விருதை கொல்கத்தா அணியில் விளையாடிய போது வென்றார். அதற்கேற்றார் போல் ஒவ்வொரு வருடமும் அசத்தி வரும் இவரையும் வருங்காலத்தை கருத்தில்கொண்டு குஜராத் தக்க வைக்க வேண்டும்.

5. முகமத் ஷமி: 6.25 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் இந்த வருடம் 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் வேகப்பந்து வீச்சு துறையின் முதன்மை பவுலராக சிறப்பாகவே செயல்பட்டார். அதை தொடர்வதற்கு இவரையும் அந்த அணி நிர்வாகம் தக்க வைக்க வேண்டும்.

6. ராகுல் திவாடியா: 9 கோடிக்கு இவர் வாங்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தாலும் 2 போட்டிகளில் தனி ஒருவனாக மேஜிக் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து அதற்கு தகுதியானவன் என்று நிரூபித்தார். மொத்தம் 16 போட்டிகளில் 217 ரன்கள் எடுத்த இவர் கணிசமாக பந்து வீசுபவராக இருப்பதால் தாராளமாக தக்க வைக்கலாம்.

சந்தேக பட்டியல்:
1. லாக்கி பெர்குசன்: 10 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் ஐபிஎல் 2022 தொடரின் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்து 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 8.96 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்தார்.

இருப்பினும் ஷமிக்கு உறுதுணையாக அனுபவம் வாய்ந்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத காரணத்தால் இவரை குஜராத் தக்கவைக்கலாம். ஆனாலும் இவர் ரன்களை குறைவாக கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

2. யாஷ் தயாள்: 3.20 கோடிக்கு வாங்கப்பட்டு நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்குசன் ரன்களை வாரி வழங்கியதால் பாதியில் வாய்ப்பு பெற்ற இவர் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இருப்பினும் இவரின் எக்கனாமி 9.25 என்பது சுமாராக இருந்தாலும் இளம் வீரராக இருப்பதுடன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அடுத்த வருடங்களில் நம்பி தக்கவைத்து வாய்ப்பளித்தால் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

3. ரிதிமான் சஹா: 37 வயதைக் கடந்தாலும் 1.90 கோடிக்கு அனைத்து போட்டிகளிலும் அசத்தவில்லை என்றாலும் இவர் 11 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 317 ரன்களை 31.70 என்ற நல்ல சராசரியில் எடுத்தார்.

சுப்மன் கில் உடன் தொடக்க வீரராக களமிறங்க வேறு தகுதியான வீரர் இல்லாததால் இவரையும் நம்பி தக்க வைக்கலாம்.

4. சாய் கிசோர்: சமீப காலங்களில் சென்னையின் பெஞ்சில் அமர்ந்து இந்த வருடம் 3 கோடிக்கு குஜராத் கொடுத்த 5 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட இவர் 6 விக்கெட்டுகளை 7.56 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்து அசத்தினார். இவரையும் தக்கவைத்து வாய்ப்பளித்தால் வரும் காலங்களில் ரசித் கானுடன் அசத்துவார் என்று நம்பலாம்.

Advertisement