கிரிக்கெட்டை தாண்டி மக்களுக்கு நன்மை செய்யும் தொண்டு நிறுவங்களை நடத்தும் 6 இந்திய வீரர்கள் – வித்யாச பதிவு

Raina-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் வீரர்களை சினிமா நட்சத்திரங்களை மிஞ்சும் வகையில் தங்களது தலையில் வைத்து கொண்டாடுவதற்கு இந்திய ரசிகர்கள் தயங்குவது கிடையாது. அப்படி வெற்றிகளையும் ரசிகர்களின் மனதையும் வெல்லும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு புகழோடு பணமும் சேர்ந்து வருவதால் பங்களா, விலையுயர்ந்த கார்கள் போன்ற சொகுசு வாழ்க்கைக்கு பஞ்சமிருக்காது. பொதுவாகவே மனிதனுக்கு எவ்வளவு செல்வம் வந்தாலும் போதாது என்ற எண்ணம் இருக்கும். அத்துடன் 100இல் 90 பேர் தாங்கள் சேமித்த செல்வத்தை தாங்களும் தங்களது வாரிசுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் சிலர் மட்டுமே என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு செல்ல என்றும் நம்மைப் போல் நம்மை விட கடினங்களை சந்திக்கும் பாமர மக்களுக்கு ஏதாவது உதவி செய்து விட்டுச் செல்வோம் என்ற என்னத்தை கொண்டிருப்பார்கள். அதை செய்வதற்கு அவர்களுக்கு பணம் தடையாக இல்லாத நிலைமையில் மனமும் குடும்பமும் ஆதரவளிப்பதால் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து அல்லது தொண்டு நிறுவனத்திற்கு பணியாற்றி மக்கள் சேவையான மகேசன் சேவையில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மக்களுக்கு உதவி புரியும் 6 நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. சுரேஷ் ரெய்னா: களத்தில் எதிரணி வீரர்கள் காயமடைந்தால் கூட துடித்துப் போய் அவர்களின் நலம் விசாரிக்கும் நல்ல உள்ளம் கொண்ட இவர் 2011 உலக கோப்பை போன்ற இந்தியாவின் சரித்திரம் வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர்.

33 வயதிலேயே ஓய்வு பெற்றாலும் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே தனது மனைவி பிரியங்காவுடன் இணைந்து தனது மகளின் பெயரான “கிராசியா ரெய்னா பவுண்டேசன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அவர் சமீப காலங்களில் ஏழை குழந்தைகளின் கல்விக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

5. கவுதம் கம்பீர்: 2007, 2011 உலக கோப்பையை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இவர் நிறைய தருணங்களில் சர்ச்சையாக பேசினாலும் உள்ளத்தில் நல்லவர் என்றே கூறலாம். ஏனெனில் கௌதம் கம்பீர் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து டெல்லியில் உள்ள ஏழைகளுக்கு தினம்தோறும் இலவச உணவு அளித்து வரும் அவர் அதனால் ஏற்பட்ட மக்கள் செல்வாக்கில் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

அதனால் அதை மேலும் விரிவுபடுத்த நினைத்த அவர் பற்றாக்குறையாக இருக்கும் பாராளுமன்ற நிதியை நம்பாமல் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளர், சாதாரண நாட்களில் வர்ணனையாளர் போன்ற வேலைகளை செய்து அதன் வாயிலாகக் கிடைக்கும் பணத்தை தொண்டு செய்வதற்கு பயன்படுத்துவது பாராட்டுக்குரியதாகும்.

- Advertisement -

4. சச்சின் டெண்டுல்கர்: இந்தியாவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்திய இந்த மகத்தான ஜாம்பவான் எப்போதுமே நல்ல மனம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். கோடிக்கணக்கில் சம்பாதித்த முதல் இந்திய வீரராக அறியப்படும் இவர் ஒவ்வொரு வருடமும் “அப்னாலயா” என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 200 ஏழைக் குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறார்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 300 ஏழைக்குழந்தைகளுக்கு இதுவரை உதவி செய்துள்ள அவர் தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து செய்திகளையும் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

3. யுவராஜ் சிங்: 2007, 2011 உலக கோப்பையை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்ட இவர் 2011 உலக கோப்பையில் புற்றுநோயுடன் விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த வெற்றிக்கு பின் புற்றுநோயையும் வென்று இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் நிறைய பேருக்கு உத்வேகமாக திகழ்கிறார்.

ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே 2012இல் “யூவிகேன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கிய அவர் தனது தாயுடன் இணைந்து புற்று நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு உதவியும் அது பற்றிய விழிப்புணர்வும் செய்து வருகிறார்.

2. விராட் கோலி: நவீன இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திர சூப்பர் ஸ்டாராக கருதப்படும் இவருக்கு பணம் ஒரு பொருட்டே கிடையாது எனலாம். மேலும் ரசிகர்கள் மீது அன்பு வைத்துள்ள அவர் தனது பணம் ஏழைகளுக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் “விராட் கோலி பவுண்டேஷன்” என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை துவங்கி நிறைய ஏழைகளுக்கு நன்மைகள் செய்து வருகிறார்.

அத்துடன் தன்னுடைய 2வது வீடான பெங்களூருவில் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவனத்திலும் இணைந்து பணியாற்றும் அவர் ஸ்மைல் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்

1. பதான் சகோதர்கள்: உதவி செய்ய பணம் தேவையில்லை மனம் போதும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த சகோதரர்கள் சச்சின், விராட் கோலி ஆகியோர் அளவுக்கு பணத்தை சம்பாதிக்கவில்லை என்றாலும் இருக்கும் பணத்தில் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.

பற்றாக்குறைக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கை நீட்டும் இவர்கள் லாக்டவுன் சமயத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியதை மறக்க முடியாது. 2014இல் “மெஹ்மூட் கான் தொண்டு நிறுவனம்” என்ற மக்கள் சேவை பணியாற்றி வரும் இவர்கள் கேரளா மற்றும் வதோதராவில் வெள்ளம் ஏற்பட்டபோது நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி புரிந்தனர்.

Advertisement