தோல்வியால் கிடைத்த தங்கங்கள் – ஐபிஎல் 2023 சீசனில் மும்பை தக்க வைக்க வேண்டிய 5 இளம் வீரர்கள்

Mumbai Indians MI
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் பல எதிர்பாராத திருப்பங்களுடன் 2 மாதங்களாக ரசிகர்களை மகிழ்வித்து நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் கோப்பையை வென்றது ஆச்சரியமாக அமைந்தது என்றால் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளால் முதல் அணியாக வெளியேறியது அதிர்ச்சியாக அமைந்தது. ஆம் 6-வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை வரலாற்றில் முதல் அணியாக முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து பங்கேற்ற 14 போட்டிகளில் முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து பெருத்த அவமானத்தை சந்தித்தது.

MI Jaspirt Bumrah

- Advertisement -

அந்த அணிக்கு ரோகித் சர்மா, இஷான் கிசான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்க தவறியதும் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தவிர அனைவரும் ரன்களை வாரி வழங்கியதும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும் தோல்வியடையும் போதுதான் பாடங்களும் அனுபவமும் பரிசாக கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில் இந்த வரலாற்று தோல்வியிலும் வரும் சீசன்களில் வெற்றி நடை போடும் அளவுக்கு ஒரு சில தரமான இளம் வீரர்கள் பரிசாக கிடைத்துள்ளனர். எனவே ஐபிஎல் 2023 சீசனில் மும்பை நிர்வாகம் தக்கவைக்க வேண்டிய இளம் வீரர்களை பற்றி பார்ப்போம்.

1. திலக் வர்மா: கடந்த சில வருடங்களாகவே ஹைதராபாத்துக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய இவரை 1.70 கோடிக்கு வாங்கிய மும்பை நிர்வாகம் சூர்யகுமார் யாதவ் காயமடைந்ததால் அவரின் இடத்தில் வாய்ப்பை வழங்கியது. அந்த முக்கியமான இடத்தில் வெறும் 19 வயது மட்டுமே நிரம்பிய இவர் முழுமையான 14 போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு அற்புதமாக செயல்பட்டார். குறிப்பாக ரோகித் சர்மா, இஷன் கிஷன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் அசத்திய இவர் 14 போட்டிகளில் 2 அரை சதங்கள் உட்பட 397 ரன்களை 36.09 என்ற நல்ல சராசரியில் 131.02 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

Tilak Varma

உலகத்தரம் வாய்ந்த அறிமுக ஐபிஎல் தொடரில் இவரின் வயதிற்கு நிச்சயமாகவே இது பாராட்ட வேண்டிய புள்ளிவிவரமாகும். அதனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளார் என்று கேப்டன் ரோகித் சர்மாவின் பாராட்டை பெற்ற இவரை மும்பை நிர்வாகம் தயக்கமின்றி தக்க வைக்கலாம்.

- Advertisement -

2. தேவாலட் ப்ரேவிஸ்: ஐசிசி அண்டர்-19 உலககோப்பை 2022 தொடரில் தென் ஆப்பிரிக்கா தோற்றாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தி தொடர் நாயகன் விருதை வென்ற இவரை 3 கோடி என்ற நல்ல தொகைக்கு மும்பை வளைத்துப் போட்டது. 19 வயது மட்டுமே நிரம்பிய இவரும் களமிறங்கிய 7 போட்டிகளிலும் அசத்தவில்லை என்றாலும் 4 போட்டிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பேட்டிங் செய்தார்.

Dewald Brevis

அதிலும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவிலியர்ஸ் போல அதிரடியாக பேட்டிங் செய்யும் இவரை “பேபி ஏபி” என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வரும் நிலையில் 7 போட்டிகளில் 161 ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்த இவரையும் மும்பை நிச்சயம் தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

3. டிம் டேவிட்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரை 8.25 கோடி என்ற பெரிய தொகையை கொடுத்து வாங்கிவிட்டு முதல் ஒருசில போட்டியில் சொதப்பினார் என்பதற்காக மும்பை நிர்வாகம் பெஞ்சில் அமர வைத்தது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியது. ஏனெனில் 8 தொடர் தோல்விகளை சந்தித்த பின் நிலையான வாய்ப்பு பெற்ற இவர் கடைசியில் மும்பை பதிவு செய்த 4 வெற்றிகளில் முக்கிய பங்காற்றி “எனக்கு ஏன் முழுமையாக வாய்ப்பு கொடுக்கவில்லை” என்று பேட்டில் கேள்வி கேட்டார்.

Tim David MI vs RR

அதுவும் 8 போட்டிகளில் 186 ரன்களை 216.28 என்ற தெறிக்கவிடும் ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய இவர் இந்த வருடம் பார்மின்றி தவிக்கும் கைரன் பொல்லார்ட் இடத்தை வரும் காலங்களில் நிரப்ப கூடியவராக இருக்கிறார். எனவே இவரை தக்க வைத்து இந்த வருடம் செய்த தவறை திரும்ப செய்யாமல் அடுத்த வருடம் முழு வாய்ப்பை மும்பை வழங்க வேண்டும்.

4. குமார் கார்த்திகேயா: சாதித்துவிட்டு தான் வீட்டுக்கு திரும்புவேன் என்று கடந்த சில வருடங்களாக வீட்டுக்கு கூட செல்லாமல் வைராக்கியத்துடன் ஐபிஎல் தொடரில் பொன்னான வாய்ப்பு பெற்ற இவர் இந்த வருடம் 4 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை 7.85 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்து நம்பிக்கை காட்டியுள்ளார். இந்த இளம் வீரரையும் தக்க வைத்தால் மும்பையின் சுழல் பந்துவீச்சு அடுத்த வருடம் பலமாகலாம்.

Kumar Katikeya

5. ரித்திக் ஷாக்கீன்: டெல்லியை சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான இவர் முதல் முறையாக இந்த வருடம் மும்பைக்கு 5 போட்டிகளில் பங்கேற்று 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் 21 வயது மட்டுமே நிரம்பிய இவரை தக்க வைத்து வரும் காலங்களில் இடையிடையே வாய்ப்பளித்தால் நல்ல பவுலராக உருவாவதற்கு வாய்ப்புள்ளது.

Advertisement