ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போல் வரக்கூடிய திறமை கொண்ட 5 வருங்கால குட்டி டிராவிட் வீரர்களின் பட்டியல்

dravid agarwal
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே இந்தியாவில் இருக்கும் 38 உள்ளூர் அணிகளுக்காக விளையாடும் இளம் கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய லட்சியமாகவும் ஆசையாகவும் இருக்கும். அதுபோல் விளையாடும் வீரர்கள் ஏற்கனவே நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சூப்பர் ஸ்டார்களாக உருவெடுத்த சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற தங்களது ரோல்மாடல்களைப் போல் வரவேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடுவார்கள். மேலும் இந்திய அணியிலும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் அவர்களைப் போன்ற வீரர்கள் தேவைப்படுகிறது.

ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்பது போல் ஒரே சச்சின், ஒரே டிராவிட் என்ற வகையில் வருங்கால வீரர்கள் அவர்களாக முடியாது என்றாலும் அவர்களைப் போல அவர்களது வழியில் பாதியளவு சிறப்பாக செயல்பட்டாலே இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க முடியும். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போன்ற ஒரு பேட்ஸ்மென் இந்திய அணிக்கு எப்போதுமே தேவைப்படுகிறது.

- Advertisement -

குட்டி டிராவிட்கள்:
ஆனால் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். ஏனெனில் பொறுமையின் சிகரமாக பவுண்டரியின் எல்லை அருகிலிருந்து வெறித்தனமாக ஓடிவந்து முழுமூச்சுடன் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்துகளை அப்படியே சுவரை போல் தடுத்து நிறுத்தும் அவர் சுழல் பந்துவீச்சாளர்களையும் போட்டுக் கொண்டே இருங்கள் தடுத்துக் கொண்டே இருக்கிறேன் என்ற வகையில் அசால்டாக எதிர்கொள்ளும் திறமை பெற்றவர். அதனாலேயே டெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ள அவர் எதிரணி பவுலர்களை களைப்படைய வைத்து நீண்ட நேரம் விளையாடி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி கொடுப்பதில் வல்லவர்.

அதற்காக அதிரடி தெரியாது என்று அர்த்தமல்ல என்ற வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,889 ரன்களை குவித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,287 ரன்களை குவித்து வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களில் முக்கியமானவராக போற்றப்படுகிறார். தற்போதைய டெஸ்ட் அணியில் புஜாரா அவரைப் போலவே செயல்பட கூடியவராக இருக்கிறார். எனவே அவரைப் போன்ற வீரர் கிடைக்க மாட்டார் என்றாலும் வருங்காலத்தில் அவரைப்போல் செயல்படக்கூடிய 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. பிரியம் கார்க்: 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற இவர் டிராவிட்டை போல பொறுமையான குணம் படைத்தவராக அறியப்படுகிறார். மேலும் கடந்த 2019 துலீப் டிராபியில் 11 போட்டிகளில் 814 ரன்களை 67.83 என்ற சிறப்பான சராசரியில் குவித்த அவர் ஒட்டுமொத்தமாக முதல்தர கிரிக்கெட்டில் 57 என்ற நல்ல சராசரியில் விளையாடி வருகிறார்.

மேலும் பேட்டிங்க்கு தேவையான அடிப்படை யுக்திகளுடன் பேட்டிங் செய்யக்கூடிய இவர் ஐபிஎல் தொடரில் கால்பதிக்க துவங்கியுள்ளார். 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் வரும் காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் 2 வகையான கிரிக்கெட்டிலும் டிராவிட் போல செயல்படும் திறமை உடையவராக உள்ளார்.

- Advertisement -

4. அபிமன்யு ஈஸ்வரன்: உள்ளூர் கிரிக்கெட்டில் 7000க்கும் மேற்பட்ட ரன்களை 45+ என்ற சராசரியில் எடுத்து வரும் இவர் ஏற்கனவே தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்த்து கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார்.

இருப்பினும் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு பெறாத அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோராக 233 ரன்களை பதிவு செய்துள்ளார். இது ராகுல் டிராவிட் போல பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்ற அவரின் திறமையை காட்டுகிறது. 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவரும் வருங்காலத்தில் இந்திய அணியில் விளையாடுவதைப் பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. சாய்க் ரஷீத்: ஆந்திராவைச் சேர்ந்த இவர் 2022 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு இந்த வருடம்தான் ரஞ்சி கோப்பை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.

முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் அகடமியில் கிரிக்கெட் பயின்று தேர்ச்சியடைந்துள்ள இவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கு தேவையான பொறுமையும் டெக்னிக்குகளையும் கற்றுள்ளார். தற்போது 17 வயது மட்டுமே நிரம்பியயுள்ள இவர் வரும் காலங்களில் டிராவிட், புஜாரா வரிசையில் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்க முடியும் என்று நம்பலாம்.

2. பாபா இந்திரஜித்: தமிழகத்தின் அபராஜித் இரட்டைக் சகோதரர்கள் ஜோடியில் பெரிய இன்னிங்ஸ் விளையாட கூடிய திறமை பெற்றுள்ள இந்திரஜித் தமிழகத்திற்காக அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட்டிலும் கடந்த 2013 முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் 11 சதங்கள் உட்பட 3636 ரன்களை 52.69 என்ற சராசரியில் குவித்து வரும் அவர் முதல்தர கிரிக்கெட்டிலும் 1154 ரன்களை 44.38 என்ற நல்ல சராசரி எடுத்து வருகிறார்.

இதனால் டிராவிட் போலவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அவரின் திறமை தெளிவாக தெரியும் நிலையில் ஏற்கனவே இவர் இந்தியா ஏ அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீப காலங்களில் தொடர்சியாக ரன்களை எடுக்கும் போதிலும் தேர்வுக்குழு இவரை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது. இருப்பினும் இப்போதும் 28 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் மனம் தளராமல் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்புக்காக போராடி வருகிறார். அந்த வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இவரும் ராகுல் டிராவிட் போல செயல்பட முடியும்.

1. ஹனுமா விஹாரி: உள்ளூர் கிரிக்கெட்டில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள இவர் புஜாரா, ரகானே ஆகியோர் இருப்பதால் இதுவரை 16 போட்டிகளில் மட்டுமே விளையாடி தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறாமல் இருந்து வருகிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் 7868 ரன்களை 55.02 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள இவர் டிராவிட், புஜாரா போல பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்.

கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சிட்னி நகரில் நடந்த டெஸ்டில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியபோது காயத்தையும் பொருட்படுத்தாமல் அஷ்வினுடன் இணைந்து 161 பந்துகள் வலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அப்போட்டியை ட்ரா செய்ததே அதற்கு சான்றாகும்.

Advertisement