ஐபிஎல் 2023 சீசனில் கோப்பையை வெல்ல ஆர்சிபி கழற்றிவிட வேண்டிய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

RCB vs PBKS Extras
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாக்-அவுட் சுற்று வரை சென்ற அந்த அணி பைனலுக்கு முந்தைய குவாலிபயர் 2 போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியடைந்தது. அதனால் முதல் கோப்பையை முத்தமிட முடியாமல் வரலாற்றில் 15-ஆவது முறையாக தோல்வியடைந்த அந்த அணி கடுமையான விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த வருடம் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட போதிலும் தினேஷ் கார்த்திக், ரஜத் படிடார் போன்றவர்கள் அதை ஈடு செய்யும் வகையில் அதிரடியாக பேட்டிங் செய்தனர். அதேபோல் பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல், ஜோஸ் ஹேசல்வுட், வணிந்து ஹசரங்கா ஆகியோர் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்காக பாடுபட்டனர். இருப்பினும் ஒருசில வீரர்கள் சுமாராக செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

அதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அந்த அணியின் மாபெரும் கனவு மீண்டும் கனவாகவே மாறியுள்ளது. இந்த வருடம் தோல்வியால் உணர்ந்த பாடங்களை பயன்படுத்தி 2023 சீசனில் மீண்டும் கோப்பையை வெல்ல பெங்களூரு முழுமூச்சுடன் போராட உள்ளது. அதற்காக இந்த வருடம் சுமாராக செயல்பட்ட தேவையற்ற வீரர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களைப் பற்றி பார்ப்போம்:

1. அனுஜ் ராவத்: இந்த வருட ஆரம்பத்தில் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் உடன் தொடக்க வீரராக களமிறங்கி மும்பைக்கு எதிரான போட்டியில் 66 (47) ரன்களை எடுத்தது தவிர பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட இவர் மொத்தம் 8 இன்னிங்சில் வெறும் 129 ரன்களை 16.13 என்ற மோசமான பேட்டிங் சராசரியில் எடுத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கும் நிலைக்கு பெங்களூரு தள்ளப்பட்டது. எனவே அடுத்த சீசனில் இவரை தாராளமாக அந்த அணி நிர்வாகம் விடுவிக்கலாம்.

2. ஷெர்பான் ரூதர்போர்ட்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர் 3 போட்டிகளில் பந்து வீசாமல் பேட்டிங்கில் 2 இன்னிங்சில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

கடந்த வருடம் டெல்லி அணிக்காக விளையாடிய போதும் 7 போட்டிகளில் 73 ரன்கள் மட்டுமே எடுத்த இவர் பந்து வீச்சில் 1 விக்கெட் மட்டுமே எடுத்து சுமாராகவே செயல்பட்டு வருகிறார். மேலும் ஆல்-ரவுண்டராக கிளன் மேக்ஸ்வெல் இருப்பதால் இவரை நீக்கிவிட்டு வேறு ஏதாவது வீரரை பெங்களூரு நிர்வாகம் முயற்சிக்கலாம்.

3. டேவிட் வில்லி: 2018இல் காயத்தால் விலகிய இவர் இந்த வருடம்தான் மீண்டும் ஐபிஎல் தொடரில் திரும்பி 4 போட்டிகளில் வெறும் 1 விக்கெட் மற்றும் 18 ரன்களை எடுத்து சுமாராக செயல்பட்டார். இந்திய மண்ணில் இதுவரை பெரிய அளவில் சோபிக்காத இவரையும் விடுவித்தால் அது தவறான முடிவாக இருக்காது.

- Advertisement -

4. சித்தார்த் கௌல்: கடந்த 2013 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் 2018 சீசனில் ஹைதராபாத் அணிக்காக 17 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்தது தவிர பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

இவரை இம்முறை 75 லட்சத்துக்கு வாங்கிய பெங்களூரு 1 போட்டியில் வாய்ப்பளித்து சோதித்ததில் விக்கெட் எடுக்காமல் 43 வரங்களை வாரி வழங்கினார். மேலும் ஹர்ஷல் படேல் இருப்பதால் இவரை தயக்கமில்லாமல் பெங்களூரு நிர்வாகம் அடுத்த வருடம் வெளியேற்றலாம்.

5. கர்ண் சர்மா: ஹைதராபாத், மும்பை, சென்னை போன்ற அணிகளில் பெஞ்சில் அமர்ந்தே கோப்பையை வென்று வந்த இவரை அதிர்ஷ்ட தேவதை என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இருப்பினும் இம்முறை அவர் இருந்தும் பெங்களூரு கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் ஹஸரங்கா, கிளென் மேக்ஸ்வெல் போன்றவர்கள் சுழல் பந்துவீச்சு துறையில் இந்த வருடம் அசத்தியதால் இவரை விடுவிப்பதில் தவறில்லை.

6. ஜேசன் பெரன்டாப்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இந்த வருடம் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. கடைசியாக கடந்த 2019இல் மும்பைக்காக 5 போட்டிகளில் 5 விக்கெட்களை 8.68 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்த இவரை ஜோஸ் ஹேசல்வுட் இருப்பதால் அணியிலிருந்து விடுவித்து வேறு பவுலரை வாங்கினால் சிறப்பாக அமையும்.

சந்தேக பட்டியல்:
1. முகமத் சிராஜ்: கடந்த 2017 முதல் பெங்களூரு அணியில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக வலம் வந்த இவருக்கு விராட் கோலி தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வாய்ப்பு கொடுத்தால் ஒருவழியாக 2021 சீசனில் 15 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை 6.78 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து அற்புதமாக பந்து வீசினார்.

அதனால் 7 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இவர் இந்த வருடம் மீண்டும் 15 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 10.08 என்ற படுமோசமான எக்கனாமியில் பந்துவீசி ஹர்ஷல் படேல், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற இதர பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சை வீணடிக்கும் வகையில் பெங்களூருவுக்கு பின்னடைவை கொடுத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 : முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க பெங்களூரு தக்க வைக்க வேண்டிய வீரர்கள்

இருப்பினும் கடினமாக உழைக்க கூடிய இவரை கடைசி முறையாக நம்பி அடுத்த வருடம் மீண்டும் சற்று குறைவான விலையில் தக்கவைத்து வாய்ப்பளித்தால் அதில் இவர் மீண்டு வருவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது.

Advertisement