ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி சதமடித்த 4 தருணங்கள்

Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங் துறையின் தூணாக 24000+ ரன்களை விளாசி 74 சதங்களை அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கிட்டத்தட்ட 50 பேட்டிங் சராசரியில் சீரான வேகத்தில் தொடர்ச்சியாக ரன்களை குவிப்பதில் வல்லவராக கருதப்படும் அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் போட்டிகளில் ஆரம்பம் முதலே அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அதிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஏற்கனவே உடைத்துள்ள அவர் 46 சதங்களை அடித்து சச்சினின் 49 சதங்கள் சாதனையையும் விரைவில் முறியடிக்க காத்திருக்கிறார்.

அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்போதே ஜாம்பவானாக நிரூபித்து வரும் அவர் சில சமயங்களில் உச்சகட்ட பார்மில் இருந்த போது அடுத்தடுத்த போட்டியில் எதிரணிகளை வெளுத்து வாங்கி சதங்களை பதிவு செய்துள்ளார். அந்த தருணங்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஆஸ்திரேலிய மண்ணில்: கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இருப்பினும் அந்த வருடம் உச்சகட்ட பார்மில் இருந்த விராட் கோலி 3வது போட்டியில் சதமடித்து 117 ரன்கள் விளாசியும் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் தோற்றது.

அதற்கடுத்த போட்டியிலும் 349 ரன்கள் துரத்தும் போது 106 (92) ரன்களை விளாசிய விராட் கோலி களத்தில் இருந்த வரை கையிலிருந்து வெற்றி அவர் அவுட்டானதும் 25 ரன்கள் வித்தியாசத்தில் பறிபோனது. இருப்பினும் 91, 59, 117, 106, 8 என அத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்கிய விராட் கோலி இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

2. ஹாட்ரிக் சதங்கள்: கடந்த 2018இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளில் வெறித்தனமாக விளையாடிய விராட் கோலி 140, 157*, 107 என ஹாட்ரிக் சதங்களை விளாசி அசத்தினார்.

இருப்பினும் அதில் வெற்றி, டை, தோல்வியை சந்தித்த இந்தியா கடைசி 2 போட்டிகளில் வென்று 3 – 1 (5) என்ற கணக்கில் விராட் கோலி தலைமையில் கோப்பையை வென்றது.

- Advertisement -

3. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக: 2019இல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா போராடி தோற்றது. அதில் 2வது போட்டியில் சதமடித்து 116 ரன்கள் குவித்த விராட் கோலி இந்தியாவின் 8 ரன்கள் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதற்கடுத்த போட்டியில் 314 ரன்களை துரத்தும் போது சதமடித்து 123 (95) ரன்கள் குவித்தும் இதர வீரர்கள் சொதப்பலால் இந்தியா பரிதாபமாக தோற்றது. அந்த தொடர் தான் கடைசியாக இந்தியா தனது சொந்த மண்ணில் தோற்றத் தொடராகும். அதன் பின் நடைபெற்ற 7 ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

4. பிடித்த இலங்கை: 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த கதைக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்பிய விராட் கோலி கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 113 (91) ரன்கள் விளாசி சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து 2022 வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்தார். அதே வேகத்தில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்து 113 (87) ரன்கள் விளாசி வெற்றி பெற வைத்த அவர் 2023 புத்தாண்டையும் வெற்றியுடன் துவக்கினார்.

இதையும் படிங்க: சுயநலமற்ற பண்பை அவங்கள பாத்து கத்துக்கோங்க, பாகிஸ்தானையும் பாபர் அசாமையும் விளாசிய டேனிஷ் கனேரியா

மேலும் இலங்கைக்கு எதிராக மலிங்கா இருந்த சமயங்களில் இருந்தே சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் 10 சதங்களை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மனாக உலக சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement