கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக வரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. என்னதான் ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் வந்து நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றினாலும் அதற்கு முன்னோடியாக கடந்த 2007ஆம் ஆண்டு துவங்கப்பட்டு டி20 கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடருக்கு அன்று முதல் இன்று வரை உள்ள தனித்துவமான மவுசு ரசிகர்களிடம் எப்போதும் குறையவில்லை.
இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதைப் பற்றியும் சிறந்து விளங்கும் 5 வீரர்களைப் பற்றியும் நிறைய ஜாம்பவான்கள் கணித்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சாதாரண போட்டியிலேயே சிறப்பாக செயல்படுவார் என்ற நிலைமையில் இந்த உலக கோப்பையில் நிச்சயம் அற்புதமாக செயல்படுவார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 24000+ ரன்களையும் 71 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளைப் பெற்று கொடுத்து வரும் அவர் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வந்த கதைக்கு சமீபத்திய ஆசிய கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்பியுள்ளார்.
4 அபார சாதனைகள்:
அந்த வகையில் உலக கோப்பைக்கு முன்பாக அவர் பார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவிற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரலாற்றில் டி20 உலகக் கோப்பை சாதனை பட்டியலின் மறு பெயராக போற்றப்படும் அளவுக்கு சில பிரமிக்க வைக்கும் வரலாற்றுச் சாதனைகளை அவர் படைத்துள்ளார். அதைப் பற்றி பார்ப்போம்:
4. அதிக சராசரி: உலகிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50+ பேட்டிங் சராசரியை கொண்டுள்ள ஒரே பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் 19 இன்னிங்சில் 845 ரன்களை 76.81 என்ற அற்புதமான சராசரியில் எடுத்து டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக பேட்டிங் சராசரியை கொண்ட பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் ஜெயவர்த்தனே, கெயில், தில்ஷன், ரோகித் சர்மா போன்றவர்களில் யாருமே வெறும் 40 சராசரியை கூட தொடவில்லை.
அந்த வகையில் உலகக் கோப்பையில் குறைந்தது 10 இன்னிங்சில் விளையாடிய வீரர்களில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹசி (54.62) இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (44.61) ஆகியோர் உள்ளனர்.
3. அதிக அரைசதங்கள்: டி20 கிரிக்கெட்டில் அரை சதங்கள் அடிப்பது சதத்திற்கு சமமாகும். அந்த வகையில் 10 அரை சதங்கள் அடித்துள்ள விராட் கோலி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெயில் (9), ரோகித் சர்மா (8), மகிளா ஜெயவர்தனே (7) ஆகியோர் உள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவெனில் 2, 3, 4 ஆகிய இடங்களில் உள்ள மேற்குறிப்பிட்ட வீரர்கள் உலக கோப்பையில் 30க்கும் மேற்பட்ட இன்னிங்சை விளையாடியுள்ளனர். ஆனால் விராட் கோலி 19 இன்னிங்ஸ்லேயே 10 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பதே அவரது தரத்திற்கு சான்றாகும்.
2. அதிக ரன்கள்: 2016 ஐபிஎல் தொடரில் 973 ரன்கள் விளாசி யாராலும் எட்ட முடியாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளதை யாரும் மறக்க முடியாது. அதற்கு முன்பாகவே கடந்த 2014இல் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20உலக கோப்பையில் அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி 4 அரை சதங்கள் உட்பட 319 ரன்களை 106.33 என்ற அபாரமான சராசரியில் 129.14 என்ன நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
அந்த தொடரில் பைனல் உட்பட அனைத்து போட்டிகளிலும் அவர் அற்புதமாக செயல்பட்ட போதிலும் இலங்கையிடம் இந்தியா தோற்து. இருப்பினும் அவருடைய ஆட்டத்திற்கு தொடர் நாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது.
1. தொடர் நாயகன்: 2014 போலவே 2016இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையிலும் அற்புதமாக செயல்பட்ட விராட் கோலி 3 அரை சதங்கள் உட்பட 5 போட்டிகளில் 273 ரன்களை 136.50 என்ற அபாரமான சராசரியில் 146.77 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து வெற்றிக்கு போராடிய போதிலும் இந்தியா அரையிறுதியில் தோற்றது.
அந்த தொடரில் வங்கதேசத்தின் தமிம் இக்பால் அதிகபட்சமாக 295 ரன்கள் குவித்த போதிலும் அவரை விட அதிகப்படியான சராசரியில் அட்டகாசமாக பேட்டிங் செய்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 தொடர் நாயகன் விருதுகளை வென்ற ஒரே வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.



