- Advertisement -
ஐ.பி.எல்

முந்தைய சீசனில் வாங்கியதை விட 2023 சீசனில் 200% மேல் அதிக சம்பளம் வாங்கும் 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ

உலகின் நம்பர் ஒன் டி20 தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023 ஆம் ஆண்டு கோடை காலம் இந்தியாவில் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதில் தற்சமயத்தில் சிறப்பான ஃபார்மில் இருப்பதுடன் பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அசத்தக்கூடிய பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேமரூன் க்ரீன் ஆகியோர் 15+ கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட்டார்கள். பொதுவாக அந்த வருடத்தில் அல்லது அந்த சமயத்தில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருக்கும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் திடீரென்று மவுசு அதிகமாகும்.

குறிப்பாக முந்தைய சீசனில் குறைந்த விலைக்கு விளையாடிய சில கிரிக்கெட் வீரர்கள் அதற்கடுத்த சீசனுக்கு முன்பாக ஏதோ ஒரு தருணத்தில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஏலத்தில் திடீரென்று அதிக தொகைக்கு வாங்கப்படுவார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் மிகவும் குறைந்த விலைக்கு விளையாடிய சில வீரர்கள் 2023 சீசனில் 100க்கும் அதிகமான சதவீத சம்பள உயர்வு பெற்றுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. சாம் கரண் 236%: 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சென்னை அணியில் சுட்டிக் குழந்தை என்று தமிழக ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2021 சீசனில் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் அதன் பின் குணமடைந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் பைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்று இங்கிலாந்து 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவரை வாங்க நிறைய அணிகள் போட்டியிட்டன.

இறுதியில் 18.50 என்ற வரலாற்றிலேயே உச்சகட்ட தொகைக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட அவர் 2021 சீசனில் சென்னை அணியில் 5.5 கோடிக்கு விளையாடினார். ஆனால் அந்த தொகையை விட 2023 சீசனில் 236% அதிக சம்பளத்திற்கு பஞ்சாப் அணியில் விளையாட அவர் தயாராகியுள்ளார்.

- Advertisement -

3. நாராயன் ஜெகதீசன் 375%: தமிழக வீரரான இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த சில வருடங்களாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாங்கப்பட்டாலும் நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்று பெஞ்சில் அமர்ந்திருந்தார். இறுதியில் கழற்றி விடப்பட்ட அவர் 2022 விஜய் ஹசாரே கோப்பையில் ஒரு போட்டியில் 277 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்து உலக அளவில் கவனம் ஈர்த்தார்.

அது போக ரஞ்சிக் கோப்பையிலும் அதிரடியாக விளையாடியதால் மதிப்பு எகிறிய அவரை வாங்குவதற்கு இந்த ஏலத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. அதில் 90 லட்சத்துக்கு கொல்கத்தா வெற்றிகரமாக வாங்கியதால் நல்லவேளை சென்னை வாங்கவில்லை இல்லையென்றால் பெஞ்சில் அமர வைத்திருந்திருப்பார்கள் என்று தமிழக ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும் கோடிகளில் விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 90 லட்சத்திற்கு போனாலும் கடந்த சீசனில் சென்னை அணிகள் 20 லட்சத்துக்கு விளையாடியதை விட 2023 சீசனில் 375% அதிக சம்பளத்திற்கு கொல்கத்தா அணியில் விளையாடப் போகிறார்.

- Advertisement -

2. ஹென்றிச் க்ளாஸின் 950%: தென்னாபிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவரை 2020, 2021, 2022 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் வாங்காத நிலையில் 2023 சீசனுக்கான ஏலத்தில் ஹைதராபாத் அணி நிர்வாகம் 5.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது.

கடந்த ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடர்களில் சில போட்டிகளில் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ள அவர் கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வெறும் 50 லட்சத்துக்கு பெங்களூரு அணியில் விளையாடினார். ஆனால் தற்போது 950% அதிக சம்பளத்தில் 2023 சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாட உள்ளார்.

- Advertisement -

1. ரிலீ ரோசவ் 1433%: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மற்றொரு அதிரடி பேட்ஸ்மேனான இவர் கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் அதிரடியாக சதமடித்து டி20 உலக கோப்பையிலும் ஒரு போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார். இருப்பினும் 2023 ஐபிஎல் ஏலத்தில் முதல் சுற்றில் ஏலம் போகாத இவரை 2வது சுற்றில் 4.6 கோடிக்கு டெல்லி நிர்வாகம் வாங்கியது.

இதையும் படிங்க: வீடியோ : கேமராவா மீது மோதி நிலைகுலைந்த தெ.ஆ வீரர் – ரசிகர்கள் வியப்பு, நடந்தது என்ன?

ஆனால் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக வெறும் 30 லட்சத்துக்கு மட்டுமே அவர் விளையாடியிருந்தார். அதனால் 2023 சீசனில் ராக்கெட்டைப் போல 1433% அதிக சம்பளத்துடன் டெல்லி அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

- Advertisement -
Published by