கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் பங்கேற்றிருந்த பல்வேறு வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த வருட ஐ.பி.எல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் t20 உலகக் கோப்பைக்கு முன்பாக செப்டம்பர், நவம்பர் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை செப்டம்பரில் மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால், இந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய வீரர்கள் அப்போது இந்தத் தொடரில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வீரர்கள் யார்யார் என்பதை கீழே நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
ஸ்ரேயாஸ் ஐயர்:
கடந்த சீசனில் டெல்லி அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற ஸ்ரேயாஸ் அய்யருக்கு, இந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு முன்பாக நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து தொடரின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் வெளியேறியதும், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு ரிஷப் பன்ட்டிற்கு சென்றது. அவரும் டெல்லி அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி சென்றதோடு மட்டுமல்லாமல், அந்த அணியை புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் இடம் பெற வைத்திருக்கிறார். ஸ்ரேயாஷ் அய்யர் செப்டம்பர் மாதத்திற்குள் சரியாகி விடுவார் என்றே தெரிகிறது. அவர் குணமாகி மீண்டும் ஐபிஎல்லுக்கு வந்தால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் செல்வதோடு மட்டுமல்லாமல், டெல்லி அணியின் பேட்டிங் வரிசையும் மேலும் வலுப்பெறும்.
தங்கராசு நடராஜன்:
தமிழக வீரரான நடராஜன் ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை மட்டுமே விளையாடிய நடராஜன், கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்தே வெளியேறினார். நடராஜன் ஐதராபாத் அணியை விட்டு வெளியேறி பின்னர், அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார் கலீல் அஹமத். ஆனால் அவரால், நடராஜன் இடத்தை நிரப்ப முடியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் நடராஜனுக்கு கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் விரைவிலேயே தனது உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் ஐபிஎல்லில் ஐதராபாத் அணிக்காக விளையாடுவார் என்று தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பென் ஸ்டோக்ஸ்:
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான இவர், ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்த்து வருகிறார். இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் பீல்டிங் செய்யும்போது, கைவிரலில் முறிவு ஏற்பட்டதால் மீதமிருக்கும் போட்டியிலிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். அவர் இல்லாத ராஜஸ்தான் அணி இத்தொடரில் பெரிய சறுக்கலை சந்தித்தது, இருந்தாலும் சில போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஒருவேளை செப்டம்பரில் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் வந்தால், பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே வலுவடையும் அந்த அணி, மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற கடினமாக போராடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஜோஃப்ரா ஆர்ச்சர்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னனி வேகப் பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்தியா இங்கிலாந்து தொடரிலிருந்தும் விலகி இருந்த ஆர்ச்சர், இப்போது பூரண குணமாகி இங்கலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டியில் பந்து வீசி வருகிறார். எனவே செப்டம்பரில் நடைபெறுப் ஐபிஎல்லின் எஞ்சிய போட்டிகளில் ஆர்ச்சர், ராஜஸ்தான் அணிக்காக விளையாடப்போவது உறுதியாகிவிட்டது. ஆர்ச்சரின் வருகையால் இந்த ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த பவுலிங் அட்டாக்கை வைத்திருக்கும் ஒரு அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உருவெடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆர்ச்சர், அந்த ஆண்டின் அதிக மதிப்பு மிக்க வீரர் விருதையும் தட்டிச் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.