ஐ.பி.எல் போட்டிகளில் சென்சுரி அடித்தும் இந்திய டி20 அணியில் இடம்பெறாமல் போன 4 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Century-ipl

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த டி20 தொடரானது இந்திய இளம் வீரர்கள், இந்திய தேசிய அணிக்கு தேர்வாவதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்தன. அதுபோலவே வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் சாதிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் யாராவது ஒரு இந்திய வீரர் சதமடிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி, இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துவிடுவார். அதுபோன்ற வீரர்களுக்கு உனடியாக இந்திய டி20 அணியிலும் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுவிடும். ஆனாலும் ஐபிஎல்லில் சதமடித்தது மட்டுமில்லாமல் அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே உண்மை. இந்த பதிவில் ஐபிஎல் போட்டிகளில் சதமடித்தும் இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காத நான்கு இந்திய வீரர்களை பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம்.

valthaty

பால் வல்தாட்டி:

- Advertisement -

2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை இவர் யார் என்றே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக இவர் அடித்த சதத்தின் மூலமாக, அந்த ஐபிஎல் தொடரில் அதிகமாக பேசப்பட்ட வீரராகவே மாறிபோனார். அந்த தொடரில் பஞ்சாப் அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடிய இவர், சென்னை அணிக்கு எதிராக 63 பந்துகளில் 120 ரன்கள் குவித்து, பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி மொத்தம் 463 ரன்கள் அடித்த வல்தாட்டிக்கு, அந்த ஆண்டு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அடுத்து வந்த இரண்டு சீசன்களிலும் தன்னுடைய திறமையை நிரூபிக்க தவறிய அவரை 2014ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலிருந்தே அவர் ஒதுக்கப்பட்டுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

agarwal

மயாங்க் அகர்வால்:

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் இவர், டி20 போட்டிகளிலும் தன்னால் அதிரடியாக விளையாட முடியும் என்பதை கடந்த சில ஐபிஎல் தொடர்களாகவே நிரூபித்து வருகிறார். அணியின் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ளும் வீரர்களில், மயாங் அகர்வாலும் ஒருத்தர் என்றால் அது மிகையாகாது. இவருடைய இந்த திறமையைக் கண்டு கடந்த ஆண்டு இந்திய ஒரு நாள் அணியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், இந்திய டி20 அணியில் இவருக்கு இன்னும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இவர், ஐபிஎல் 13வது சீசசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 50 பந்துகளில் 106 ரன்கள் அடித்து அசத்தியதோடு மட்டுமல்லாமல், அந்த தொடரில் 424 ரன்களை 156 என்ற அதிவேக ஸ்ரைக் ரேட்டுடன் அடித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்திய அணியில் இடம்பிடித்து வரும் இவர் எதிர்வரும் காலத்தில் டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Saha

விருத்திமான் சாஹா:

மயாங்க் அகர்வாலைப் போலவே இவரும் இந்திய அணியில் ஒரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக மட்டுமே இடம்பிடித்து வருகிறார். ஆனால் 2014-2017ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடர்களில் இவர் அதி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணி இறுதிப் போட்டிவரை முன்னேறி செல்ல இவருடைய ஆட்டமும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். அந்த ஆண்டில் லீக் போட்டிகளில் மட்டுமல்லாது இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய சாஹா, அந்த போட்டியில் 55 பந்துகளில் 115 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்மிழக்காமல் இருந்தார். ஆனால் அவர் ஐபிஎல்லில் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில் இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மகேந்திர சிங் தோணி இருந்ததால் சாஹாவிற்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Padikkal

தேவ்தத் படிக்கல் :

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரரான தேவ்தத் படிக்கல் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் அறிமுகமாகி அந்தத் தொடரிலேயே 5 அரைச் சதங்களுடன் 473 ரன்களை அடித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். மேலும் இவர் இளம் வீரர் என்பதால் நிச்சயம் இவருக்கு இந்திய அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement