இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் காலியாக உள்ள 2 இடத்திற்கு – 3 பேர் போட்டி – வாய்ப்பு யாருக்கு?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் மார்ச் 4-ஆம் தேதி மொகாலியில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேளையில் அதில் 4 சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே, இஷாந்த் ஷர்மா மற்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகிய நான்குபேர் அணியின் நலன் கருதியும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதன் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த பல தொடர்களாகவே தொடர்ச்சியாக மந்தமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த காரணமாக இவர்களை நீக்கிவிட்டு இந்திய அணியை இனி அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற வேண்டும் என்பதன் காரணமாகவே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளதாக தேர்வு குழுவின் சார்பாக கூறப்பட்டது. இதன் காரணமாக டெஸ்ட் அணியில் சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராகவும், கே.எஸ் பரத் பேக்அப் கீப்பராகவும் இருப்பதனால் சஹாவிற்கு பதில் பண்ட் விளையாடுவது உறுதியாகிவிட்டது. அதேபோன்று பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் இடத்திற்கு முகமத் சிராஜ் வரிசையில் நிற்பதால் அந்த இடத்திற்கும் பிரச்சனை இல்லாமல் போனது. இவ்வேளையில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பல ஆண்டுகளாக பலம் சேர்த்து வந்த ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இடத்தில் யார் இறங்குவார்கள் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

அந்த வகையில் காலியாக உள்ள இந்த 2 இடத்திற்கு மூன்று இளம் வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் மாயங்க் அகர்வால் இறங்கும் பட்சத்தில் புஜாரா இறங்கும் மூன்றாவது இடத்தை குறிவைத்து சுப்மன் கில் வரிசையில் நிற்கிறார். அதேவேளையில் ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் சதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயரும் அந்த மூன்றாவது இடத்திற்கு போட்டியில் உள்ளார்.

- Advertisement -

மேலும் ரஹானே இறங்கும் ஐந்தாவது இடத்திற்கு ஹனுமா விஹாரி நீண்ட காலமாக காத்திருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடாத விஹாரி டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்பதனால் நிச்சயம் ரஹானேவின் இடம் அவருக்கு தான் வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடி உள்ள அனைத்து டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் நிச்சயம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வினோதமான பதிவுகள் – என்ன ஆனது அவருக்கு – நீங்களே பாருங்க

இப்படி சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் விகாரி ஆகிய மூன்று பேர் இந்த இரண்டு இடங்களுக்காக போட்டியில் உள்ளனர். இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் இந்திய அணியை அறிவித்த பின்னர்தான் யாருக்கு அந்த இடங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியும். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மொஹாலியில் நாளை மறுதினம் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement