உலககோப்பை செமிபைனல், பைனல்களில் ஆட்டநாயகன் விருது வென்ற – 3 மகத்தான ஜாம்பவான்கள்

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் தனது நாட்டுக்காக சர்வதேச அரங்கில் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை பல லட்சங்களில் முதன்மையானதாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் அணியில் 11 பேர் இருந்தாலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பையில் உலகின் எந்த இடத்திலும் எப்பேர்பட்ட தரமான எதிரணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடிக் கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பது ஒருசில வீரர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றாகும்.

அதனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்று வல்லுனர்கள் மற்றும் ரசிகர்கள் போற்றும் அந்த மகத்தான வீரர்கள் கூட போட்டியின் தன்மைக்கேற்ப தடுமாறும் நிலை ஏற்படும். அதாவது உலக கோப்பையில் நாக்-அவுட் சுற்றை காட்டிலும் சாதாரண லீக் சுற்றில் சிறப்பாக செயல்படுவது சுலபமானது. ஏனெனில் லீக் சுற்றில் அதுவரை போராடி வந்த போராட்டம் நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்தால் அத்தோடு கதை முடிந்து வெளியேறி விடவேண்டும் என்ற பயம் கலந்த பதற்றம் இயற்கையாகவே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கூட தடுமாற வைக்கும்.

- Advertisement -

அஞ்சாத நாயர்கள்:
அந்த பதற்றத்தையும் தாண்டி நாக்-அவுட் சுற்றில் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் மிகச் சிறப்பாக செயல்படுவது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் ஏற்கனவே நம்மை போலவே லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்டு நமக்கு சரி சமமான பலம் வாய்ந்த வீரர்கள் தான் எதிரணியில் இருப்பார்கள்.

எனவே அந்த அத்தனை அம்சங்களையும் தாண்டி கோப்பையை தொடுவதற்கு இறுதிப்போட்டியில் காலடி வைப்பதற்கு உதவும் அரை இறுதிப் போட்டியிலும் கோப்பையை முத்தமிடுவதற்கு உதவும் இறுதிப் போட்டியிலும் ஒருசேர அபாரமாக செயல்படுவதெல்லாம் உண்மையாகவே ஒரு அஞ்சாத நெஞ்சம் படைத்த மகத்தான வீரர்களால் மட்டுமே முடியும். அந்த வகையில் உலக கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சேர்ந்தார் போல் ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

3. ஷேன் வார்னே: புகழ்பெற்ற 1999 உலக கோப்பையில் லீக் சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பர்மிங்காம் நகரில் நடந்த 2-வது அரையிறுதிப் போட்டியில் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஹெர்சல் கிப்ஸ் உலகக் கோப்பை தாரை வார்த்தது போல் விட்ட கேட்சை பயன்படுத்திய கேப்டன் ஸ்டீவ் வாக் 56, மைக்கேல் பெவன் 65 ரன்களால் 213 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே தடுமாறிய நிலையில் ஜேக் காலிஸ் 53, ஜான்டி ரோட்ஸ் 43 ரன்கள் எடுக்க கடைசியில் லன்ஸ் க்ளூஸ்னரின் 31* (16) ரன்கள் போராட்டம் வீணாகும் வகையில் ஆலன் டொனால்ட் ரன் அவுட்டானதால் மிகச்சரியாக 213 ரன்களை எடுத்து தோற்றதை யாராலும் மறக்க முடியாது. அப்போட்டியில் 10 ஓவர்களில் வெறும் 29 ரன்களை 2.90 என்ற அற்புதமான எக்கனாமியில் 4 விக்கெட்கள் எடுத்து சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ஷேன் வார்னே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

அதன்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மாபெரும் பைனலில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை 4 விக்கெட்கள் எடுத்து தனது அற்புதமான பந்து வீச்சால் வெறும் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாக துருப்புச் சீட்டாக செயல்பட்ட அவர் பின்னர் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2-வது உலக கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். சமீபத்தில் மறைந்த அவரின் இந்த புகழ் காலத்திற்கும் நின்று பேசும் என்பதில் சந்தேகமில்லை.

2. அரவிந்தா டீ சில்வா: 1996இல் நடைபெற்ற வில்ஸ் உலக கோப்பையை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா சொந்த மண்ணில் முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயித்த 252 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் 65 ரன்களில் அவுட்டானதும் எஞ்சிய அனைவரும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 34.1 ஓவரில் 120/8 என தோல்வி உறுதியானது.

- Advertisement -

அதை ஏற்றுக்கொள்ள முடியாத அப்போட்டி நடைபெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதான ரசிகர்கள் போஸ்டர்களால் மைதானத்தில் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டு போட்டியை நிறுத்தினார்கள். அதனால் இந்தியா தோற்றதாக அறிவித்த அம்பயர்கள் இலங்கை வென்றதாக அறிவித்தனர். அந்த வெற்றிக்கு 66* (47) ரன்களை அந்த காலத்திலேயே 140.42 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அரவிந்தா டீ சில்வா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மாபெரும் இறுதி போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கைக்கு 13 பவுண்டரி உட்பட சதமடித்து 107* (124) ரன்கள் குவித்த அவர் 3 விக்கெட்டுகளையும் எடுத்து தனது நாடு முதல் உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

1. மொஹிந்தர் அமர்நாத்: 1983இல் இங்கிலாந்தில் நடைபெற்ற வரலாற்றின் 3-வது உலக கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட கபில்தேவ் தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அட்டகாசமாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியதையே அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அந்த நிலைமையில் மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் செமி ஃபைனலில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இந்தியா அந்த அணி நிர்ணயித்த 214 ரன்கள் இலக்கை 54.4 ஓவரில் 217/4 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேஸிங் செய்து மண்ணை கவ்வ வைத்த அதிர்ச்சி கொடுத்தது. அந்த வெற்றிக்கு 2 விக்கெட்டுகளையும் 46 ரன்களையும் எடுத்த மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

அதன்பின் அந்த சமயத்தில் கிரிக்கெட்டின் அசுரனாக 1975, 1979 ஆகிய அடுத்தடுத்த 2 உலக கோப்பைகளை வென்ற வெறித்தனமான கிளைவ் லாய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீசை உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் 3-வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த உலகத்திற்கு அபாரமாக பந்துவீசிய இந்தியா வெறும் 140 ரன்களுக்கு சுருட்டி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்து முதல் உலக கோப்பையை முத்தமிட்டது.

அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் 26 ரன்கள் 3 விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய மொஹிந்தர் அமர்நாத் ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த உலகக் கோப்பை வெற்றி தான் இன்று இந்தியாவில் கிரிக்கெட் எனும் விளையாட்டு ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு போடப்பட்ட ஆழமான விதையாகும்.

Advertisement