அந்த 2 இளம் வீரர்களால் 4 – 5 கப் வாங்கப்போகிறோம் – தெ.ஆ ஜாம்பவான் கணிப்பால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி

MI Mumbai Indians
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27இல் துவங்கியது. பிரிஸ்டோல் நகரில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தங்களுக்கே உரித்தான பாணியில் சரவெடியாக தென்ஆப்பிரிக்க பவுலர்களை வெளுத்து வாங்கி 20 ஓவர்களில் 234/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் வெறும் 7 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 22 ரன்கள் குவிக்க அடுத்து வந்த மொயின் அலி 2 பவுண்டரி 6 சிக்சருடன் 52 (18) ரன்களை விளாசினார்.

அதனால் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதமடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்த அவருடன் கடைசிவரை பேட்டிங் செய்த ஜானி பேர்ஸ்டோ 3 பவுண்டரி 8 மெகா சிக்ஸர்களுடன் 90 (53) ரன்களை வெளுத்து வாங்கினார். தென்னாப்பிரிக்க சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 235 என்ற கடினமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டி காக் 2, ரிலீ ரோசாவ் 4 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் ரீசா ஹென்றிக்ஸ் 57 (33) ரன்களும் ஹென்றிச் க்ளாசீன் 20 (14) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

- Advertisement -

மிரட்டிய ஸ்டப்ஸ்:
போதாகுறைக்கு டேவிட் மில்லரும் 8 (12) அவுட்டாகி சென்றதால் தென் ஆப்பிரிக்காவின் தோல்வி உறுதியானது. ஆனால் 86/4 என்ற நிலைமையில் தென்னாப்பிரிக்கா தடுமாறியபோது தனது அறிமுக இன்னிங்சில் களமிறங்கிய இளம் வீரர் ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் பயமறியாத இளம் கன்றைப் போல சீறிப்பாய்ந்து இங்கிலாந்து பவுலர்களை சரமாரியாக அடித்தார். முதல் இன்னிங்சில் விளையாடுபவரை போலல்லாமல் நல்ல அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனை போல் சிக்சர்களை தெறிக்கவிட்ட அவர் வெறும் 28 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்சருடன் 72 ரன்களை 257.14 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வெற்றிக்காகப் போராடி கடைசியில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவரில் 193/8 ரன்கள் மட்டும் எடுத்து தென் ஆப்பிரிக்கா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இருப்பினும் 21 வருடம் 347 நாட்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்த ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் வெற்றிக்காக போராடிய விதம் பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களை பெற வைத்தது.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
குறிப்பாக அவரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் அவரை விட இன்னும் வயதில் இளமையான மற்றொரு வீரர் தேவால்ட் பிரேவிஸ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் இணைந்து அடுத்த 10 வருடங்களுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க போவதாக தனது ட்விட்டரில் பாராட்டி இருந்தார். இதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் டைமல் மில்ஸ் காயத்தால் விலகியதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

அந்த அதிர்ஷ்டத்தால் ஐபிஎல் முடிந்ததும் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டெல்லியில் அறிமுகமான அவர் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. அதன்பின் இந்த இங்கிலாந்து தொடரில் களமிறங்கிய முதல் இன்னிங்சிலேயே அட்டகாசமாக செயல்பட்டு வருங்கால சூப்பர் ஸ்டார் வீரராக தன்னை நிரூபித்துள்ளார்.

- Advertisement -

அதேபோல் ஐசிசி அண்டர்-19 உலககோப்பை 2022 தொடரில் தென் ஆப்பிரிக்கா தோற்றாலும் 300க்கும் மேற்பட்ட ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல்-ரவுண்டராக அசத்திய தேவாலட் ப்ரேவிஸ் ஐபிஎல் 2022 தொடரில் மும்பைக்காக 7 போட்டிகளில் 161 ரன்களை 142.48 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதுடன் 1 விக்கெட் எடுத்து மும்பையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

3 – 4 கோப்பைகள்:
இப்படி 2 தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளதால் ஐபிஎல் 2022 தொடரில் கடைசி இடத்தை பிடித்த தங்களது அணி வருங்காலத்தில் சக்கை போடு போட்டு மேற்கொண்டு 3 – 4 கோப்பைகளை வெல்லும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: IND vs WI : ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் தோற்க அந்த 2 இந்திய வீரர்கள் தான் காரணம் – வெ.இ கோச் வெளிப்படையான பாராட்டு

யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப்போல் இந்த வருடம் சறுக்கினாலும் ஸ்டப்ஸ், ப்ரேவிஸ் ஆகிய இளம் வீரர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட், இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் இருப்பதால் தங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுடன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிசான் என தரமான வீரர்கள் ஏற்கனவே இருப்பதால் அடுத்த வருடம் முதல் மீண்டும் எதிரணிகளை வழக்கம்போல மும்பை இந்தியன்ஸ் தெறிக்க விடப் போவதாகவும் மும்பை ரசிகர்கள் கெத்தாக பேசுகின்றனர்.

Advertisement