இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 14வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வீரர்களிடையே பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஐபிஎல் அணிகள் பங்கேற்கும் வீரர்களுக்கு கோடிகளில் வருமானம் கிடைப்பதாலும் தேசிய அணியில் இடம் கிடைப்பதாலும் தங்களது திறமையை ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களிடையே பெருகி வரும் உற்சாகம் காரணமாகவும் மேலும் இந்த தொடரை சுவாரசிய படுத்தும் நோக்கில் அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.
தற்போது வரை 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஏற்கனவே சில சீசன்களில் குஜராத் லயன்ஸ், புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் போன்ற அணிகள் இடையில் இணைந்து பின்னர் பின்வாங்கியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான 15 வது சீசனில் அகமதாபாத் மையமாகக் கொண்ட ஒரு அணியும், மற்றொரு மாநிலத்தை மையமாக கொண்ட ஒரு அணியும் உருவாக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய இரண்டு அணிகளையும் வாங்குவதற்கு ஆரம்ப விலையாக 1850 கோடியை பிசிசிஐ நிர்ணயம் செய்துள்ளது.

இதனை கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மோகன்லால் மற்றும் அதானி குழுமத்தை சேர்ந்தவர்கள் வாங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நிச்சயம் அடுத்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்கும் தொடர் நடைபெறும் என்று உறுதியாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.



