இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அண்டர்-19 கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. பாண்டிச்சேரியில் நடைபெற்ற அந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அண்டர்-19 அணி 3 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து அவ்விரு அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 30ஆம் தேதி சேப்பாக்கத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அண்டர்-19 முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 293 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரிலே கிங்ஸ்செல் 53, கிறிஸ்டின் ஹோவ் 48, ஐடன் ஓ கோனர் 61 ரன்கள் எடுத்தனர்.
13 வயதில் அதிரடி:
இந்திய அண்டர்-19 அணிக்கு அதிகபட்சமாக முகமது இனான், சமர்த் நாகராஜ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 133 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த விஹான் மல்ஹோத்ரா 76 (108) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூரியவன்சி டி20 போல விளையாடி ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கி ரன்களை குவித்தார்.
அதே வேகத்தில் பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 58 பந்துகளில் 100 ரன்களை தொட்டு 14 பவுண்டரி 4 சிக்சருடன் 104 (62) ரன்கள் ரன் அவுட்டானார். இதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இந்திய மற்றும் ஆசிய வீரர் ஆகிய 2 சாதனைகளையும் வைபவ் சூரியவன்சி படைத்துள்ளார்.
உலகளவில் 2005ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மொய்ன் அலி 56 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை பிடித்துள்ள வைபவ் தனது 13 வயது 187 நாட்களில் இந்த சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக அண்டர்-19 டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் படைத்துள்ளார். இதற்கு முன் தற்போதைய வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் சாண்டோ 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 14 வருடம் 231 நாட்கள் வயதில் சதமடித்ததே முந்தைய சாதனை.
13 வயதில் உலக சாதனை:
மேலும் கடந்த ஜனவரி மாதம் தனது 12 வயதில் வைபவ் ரஞ்சிக்கோப்பையில் பீகார் அணிக்காக அறிமுகமாகி விளையாடினார். இதன் வாயிலாக முதல் தர கிரிக்கெட்டில் இளம் வயதில் விளையாடிய இந்திய வீரர் என்ற சச்சின் (15 வருடம் 230 நாட்கள்) மற்றும் யுவராஜ் (15 வருடம் 57 நாட்கள்) சாதனையையும் உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் நிலை – என்ன தெரியுமா?
அவருடைய அதிரடியான ஆட்டத்தால் இந்தியா அண்டர்-19 296 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக இந்திய வம்சாவளி வீரர் விஸ்வா ராம்குமார் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து விளையாடும் ஆஸ்திரேலியா அண்டர் 19 இரண்டாவது நாள் முடிவில் 110-4 ரன்கள் குவித்து இந்தியாவை விட 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.