அன்று ஷூ இல்லாமல் கண்ணீர் விட்ட வீரர், இன்று ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி யுவிக்கு பின் படைத்த வரலாற்று சாதனை – வீடியோ உள்ளே

Ryan Burl shoes
- Advertisement -

சர்வதேச அளவில் அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களது அணிக்காக விளையாடும் வீரர்கள் வெற்றி பெறுவதற்காக தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி முழு மூச்சுடன் போராடுவார்கள். அப்படி என்னதான் முழு திறமையை வெளிப்படுத்தினாலும் கிரிக்கெட் மட்டுமல்லாது எந்த விளையாட்டிலும் அதில் சிறந்து விளங்குவதற்கு அது சம்பந்தமான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதுபோன்ற நிலைமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக தற்போது ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளதை பற்றி பார்ப்போம்.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற்றது.

- Advertisement -

தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த ஜிம்பாப்வே அணிக்கு சக்பாவா 17, கிரைக் எர்வின் 24, மதவேரே 5, சிகந்தர் ராசா 0, சீன் வில்லியம்ஸ் 2, மில்டன் சும்பா 4 என முக்கிய வீரர்கள் அனைவரும் வங்கதேசத்தின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அதனால் 13 ஓவரில் 67/6 என திணறிய அந்த அணி 100 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டதுடன் தோல்வியும் உறுதியென்று நம்பப்பட்டது.

34 ரன்கள்:
அந்த நிலைமையில் 8-வது இடத்தில் களமிறங்கிய ஜிம்பாப்வே வீரர் ரியன் புர்ள் மனம் தளராமல் அதிரடியாக ரன்களை சேர்க்க துவங்கினார். அந்த சமயம் பார்த்து 15-ஆவது ஓவரை வீச வந்த நசும் அஹமதை நசுக்கும் வகையில் முரட்டுத்தனமான பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 6, 6, 6, 6 என தொடர்ச்சியாக 4 சிக்சர்களை தெறிக்க விட்டு 5-வது பந்தில் பவுண்டரியும் 6-வது பந்தில் மீண்டும் மெகா சிக்சரையும் பறக்க விட்டு 34 ரன்களை விளாசினார். மேலும் மொத்தமாக 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 28 பந்துகளில் 54 ரன்களை 192.86 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவருடன் லுக் ஜோங்வே 35 (20) ரன்கள் குவித்ததால் தப்பிய ஜிம்பாவே 20 ஓவர்களில் 156/8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 157 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் 13, ஏமோன் 2, ஆனமல் ஹேக் 14, மகமதுல்லா 27, சாண்டோ 14, ஹொசைன் 0 என முக்கிய வீரர்கள் அனைவரும் ஜிம்பாப்வேயின் தரமான பந்துவீச்சின் பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் இறுதியில் அஃபிப் ஹொசைன் 39* (27) ரன்கள் எடுத்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வங்கதேசம் 146/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

யுவிக்குப்பின் வரலாறு:
அதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை முத்தமிட்டது. இந்த வெற்றிக்கு 54 ரன்கள் குவித்து கருப்பு குதிரையாக செயல்பட்ட ரியன் புர்ள் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதைவிட ஒரே ஓவரில் 34 ரன்களை தெறிக்கவிட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் குவித்த 3-வது பேட்ஸ்மேன் மற்றும் முதல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அந்த பட்டியல்:
1. யுவராஜ் சிங் : 36 ரன்கள், ஸ்டூவர்ட் பிராட்கு எதிராக, 2007
2. கைரன் பொல்லார்ட் : 36 ரன்கள், தனஞ்சயாவுக்கு எதிராக, 2021
3. ரியன் புர்ள் : 34* ரன்கள், நசும் அகமதுகு எதிராக, 2022*

ஷூ இல்லாமல்:
இப்படிப்பட்ட இவர் பயிற்சி எடுத்து விளையாடுவதற்கு நல்ல தரமான ஷூக்கள் இல்லாததால் ஒவ்வொரு தொடருக்கும் பின்பும் தேய்ந்து கிழிந்து போகும் தங்களது ஷூக்களை பசை போட்டு ஒட்டி கொள்ள வேண்டிய நிலைமை இருப்பதால் யாராவது எங்களுக்கு ஸ்பான்சர் செய்வீர்களா என்று கடந்த 2021இல் தனது ட்விட்டரில் கண்ணீர் மல்க பரிதாபத்துடன் கேட்டார். சர்வதேச அளவில் விளையாடும் வீரருக்கு இப்படி ஒரு நிலைமையா என்ற வகையில் அவரின் கண்ணீர் பதிவு வைரலானது.

அவருக்கு ஆதரவாக திரண்ட ரசிகர்கள் அவரின் பதிவை ட்ரெண்ட் செய்த நிலையில் அது பிரபல காலணிகள் நிறுவனமான புமா நிறுவனத்தை சென்றடைந்தது. நல்ல மனம் கொண்ட அந்த நிறுவனம் உடனடியாக அவருக்கு புதிதாக ஒரு ஜோடி ஷூக்களை அனுப்பி வைத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியது. தற்போது அந்த காலணிகளால் அட்டகாசமாக விளையாடி வரும் அவர் யுவராஜ் சிங்க்கு பின் அபார சாதனை படைத்துள்ளதை பார்த்து ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள்.

Advertisement