ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக உறுப்பு நாட்டு அணிகளுக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ஆப்பிரிக்க கண்டதற்கான தகுதி சுற்றுப்போட்டிகள் நைரோபியில் நடைபெற்று வருகின்றன. அந்த பிரிவில் அக்டோபர் 23ஆம் தேதி நைரோபியில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் கம்பியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் மோதின.
அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 5.4 ஓவரிலேயே 98 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்த மருமணி 9 பவுண்டரி 4 சிக்ஸருடன் 62 (19) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய பிரயன் பெனட் 50 (26) ரன்கள் குவித்து அவுட்டானார்.
பரிதாப கம்பியா:
மிடில் ஆர்டரில் மேயர்ஸ் 12 ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் சிக்கந்தர் ராசா சரமாரியாக அடித்து நொறுக்கினார். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய பெரிய அனுபவம் இல்லாத புள்ளப்பூச்சியை போன்ற கம்பியா அணி பவுலர்கள் சுமாராக பந்து வீசினர். அவர்களுக்கு கொஞ்சமும் கருணை காட்டாமல் சூறையாடிய சிக்கந்தர் ராசா முரட்டுத்தனமாக அடித்து 7 பவுண்டரி 15 சிக்ஸருடன் 133* (43) ரன்கள் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார்.
அவருடன் ரியான் புர்ல் 25 (11) ரன்களும் கடைசி நேரத்தில் வெளுத்து வாங்கிய கிளைவ் மடன்டே 53* (17) ரன்களும் குவித்தனர். அதனால் 20 ஓவரில் ஜிம்பாப்வே 344-4 ரன்கள் குவித்து மிரட்டியது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையையும் ஜிம்பாப்வே படைத்துள்ளது.
ஜிம்பாப்வே உலக சாதனை:
இதற்கு முன் கடந்த 2023ஆம் ஆண்டு மங்கோலியா அணிக்கு எதிராக நேபாள் 314-3 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். கம்பியா அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரே ஜார்ஜு 2 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 345 என்ற இமாலய இலக்கை துரத்திய கம்பியா அணியை 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு ஜிம்பாப்வே சுருட்டியது. கம்பியா அணிக்கு 10 பேட்ஸ்மேன்கள் இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ஜார்ஜு 12* ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: எங்களிடம் 4 அஸ்திரம் இருக்கு.. அந்த சவாலை சமாளிச்சு இந்தியாவை வீழ்த்துவோம்.. டாம் லாதம் பேட்டி
ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் மட்டுவா 3, ரிச்சர்ட் ங்கரவா 3, வேஸ்லே மாதவேர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 290 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்வே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்து மற்றுமொரு உலக சாதனை படைத்தது. இதற்கு முன் 2023இல் மங்கோலியாவுக்கு எதிராக நேபாள் 273 வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை.



