
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை துவங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத அஸ்வின் 4-வது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த விவகாரம் குறித்து பேசுகையில் ஜாஹீர் கான் கூறுகையில் :
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கடுமையான சொதப்பலுக்கு பின்னர் புஜாராவுக்கு அழுத்தம் இருந்தது. ஆனால் அவர் கடந்த டெஸ்ட் போட்டியின்போது சிறப்பாக விளையாடி நிம்மதியை கொடுத்துவிட்டார். அதிலிருந்து அவருக்கு ஒருவித நிம்மதி கிடைத்திருக்கும். ஆனால் ரஹானே விவகாரம் அப்படி இல்லை.
இந்த தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதால் அணி எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் அடுத்த போட்டியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர் : நீங்கள் அணியில் வெகுகாலம் விளையாடி இருக்கலாம். ஆனால் உங்களது கடந்த கால சாதனைகள் மட்டுமே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
தற்போதைய செயல்பாடும் அவசியம் இதன் காரணமாக அணியில் மூத்த வீரர்களாக இருந்தாலும் இளம் வீரர்களுக்கு ஏற்ப சரியான போட்டி அளிப்பது முக்கியம். ஒரு அணியில் மூத்த வீரராக இருப்பது இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதே வேளையில் அணியில் இருக்கக் கூடிய வாய்ப்பையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஜாஹீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.