அமெரிக்காவில் ஜூன் 2-ஆம் தேதி துவங்கிய நடப்பு டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் நாளை ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிகள் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த டி20 உலககோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடருக்கான விளம்பர தூதர்களாக பல்வேறு நட்சத்திர முன்னாள் வீரர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கும் ஒருவர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவருக்கு தூதர் பதவியை வழங்கி சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது யுவராஜ் சிங் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரிடம் இந்த தொடரில் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங் கூறுகையில் : இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று நம்புகிறேன். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மட்டும் இறுதி போட்டிக்கு முன்னேறி விடக்கூடாது என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
இப்படி யுவ்ராஜ் சிங் கூற காரணம் யாதெனில் : ஏற்கனவே கடந்த காலங்களில் இந்திய அணி எப்போதெல்லாம் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் முன்னேறியிருந்ததோ அப்போதெல்லாம் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. 2003 ஆம் ஆண்டு உலககோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 50 ஓவர் உலக கோப்பை என பலமுறை இதேபோன்று நடந்துள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு வந்து விடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலிக்காக.. அந்த தரமான பிளேயரை கழற்றி விட்டு இந்தியா வேஸ்ட் பண்ணிடக் கூடாது.. இயன் பிஷப்
மேலும் இந்த டி20 தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போவது விராட் கோலி தான் என்று குறிப்பிட்ட அவர் ரிஷப் பண்டின் பேட்டிங்கை உற்று நோக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒரு பெரிய விபத்திற்கு பிறகு மீண்டு வந்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் அவரின் ஆட்டத்தை காண தயாராக உள்ளதாக யுவ்ராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.