IND vs ENG : ரிஷப் பண்ட் சதமடித்து முத்திரை பதிக்க காரணமே யுவராஜ் சிங் தான் – வெளியான சூப்பர் தகவல், ரசிகர்கள் வியப்பு

- Advertisement -

இங்கிலாந்து – இந்திய அணிகள் மோதிய வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியை பதிவு செய்ததால் சமனடைந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டி ஜூலை 17-ஆம் தேதியான நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை மீண்டும் அபாரமாக பந்துவீசிய மடக்கிப் பிடித்த இந்தியா 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக்கியது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த அந்த அணிக்கு ஜேசன் ராய் 41, பென் ஸ்டோக்ஸ் 27, மொய்ன் அலி 34, லிவிங்ஸ்டன் 27 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 60 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1, ரோஹித் சர்மா 17 என ஓபனிங் ஜோடி சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டிய நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்களிலும் காப்பாற்றுவார் என கருதப்பட்ட சூர்யகுமார் யாதவ் 16 ரன்களிலும் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர்.

- Advertisement -

காப்பாற்றிய பண்ட்:
அதனால் 72/4 என மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவின் தோல்வி உறுதியென்று ரசிகர்கள் சோகமடைந்தபோது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை சேர்த்தனர். நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் 18 ஓவர்கள் நங்கூரமாக பேட்டிங் செய்து 133 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவை தூக்கி நிறுத்தியது. அதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்கள் எடுத்து வெற்றி உறுதி செய்து பாண்டியா ஆட்டமிழந்தாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்தார்.

அதனால் 42.1 ஓவரில் 261/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்று 2 – 1 (3) என்ற கணக்கில் 2014க்கு பின்பு முதல் முறையாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தொடரை வென்றது. இந்த வெற்றிக்கு இந்தியா தடுமாறியபோது அபாரமாக பேட்டிங் செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

நிரூபித்த பண்ட்:
இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்த ரிஷப் பண்ட் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் தம்மால் சிறப்பாக செயல்பட முடியும் என்று இந்த உலகிற்கு நிரூபித்துள்ளார். ஏனெனில் கடந்த 2018இல் அறிமுகமான இவர் ஜாம்பவான் எம்எஸ் தோனிக்கு பின் வளர்ந்து வரும் நல்ல விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் செய்து காட்டி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.

குறிப்பாக சமீபத்திய பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் கூட 98/5 என இந்தியா சறுக்கிய போது 145 (111) ரன்களை தெறிக்கவிட்டார். ஆனால் அதிரடி காட்ட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கடந்த 4 வருடங்களில் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத காரணத்தால் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்களுக்கு உள்ளானார். அந்த நிலைமையில் இந்த அற்புதமான இன்னிங்சால் அந்த விமர்சனங்களை ரிஷப் பண்ட் உடைப்பதற்கு முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தான் முக்கிய காரணமாக பின்னணியில் இருந்துள்ளார்.

45 நிமிடங்கள்:
ஆம் டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிரணிகளை தெறிக்கவிட்டு நல்ல பார்மில் இருக்கும் அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தவறான ஷாட்கள் போன்ற தவறான அணுகுமுறைகளால் தொடர்ச்சியாக சொதப்பி வந்தார். அதனால் இப்போட்டிக்கு முன்பாக அவரை ரிஷப் பண்ட்டை அழைத்துப் பேசிய யுவராஜ் சிங் அவருக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கான சில அணுகுமுறைகளையும் ஆலோசனைகளையும் யுக்திகளையும் தெரிவித்ததாக தெரிகிறது.

குறிப்பாக எடுத்த எடுப்பிலேயே அதிரடியை காட்டாமல் முதலில் செட்டிலாகி பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற முக்கியமான யுக்தியை யுவராஜ் சிங் அவருக்கு கற்பித்ததாக தெரிகிறது. இது பற்றி 45 நிமிடங்கள் பேசியதன் பலனாக இப்போட்டியில் இந்தியாவை வெற்றி பெறும் அளவுக்கு அபாரமாக செயல்பட்ட ரிஷப் பண்ட்டை யுவராஜ் சிங் தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement