இந்திய கிரிக்கெட்டில் 1983 உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் இன்றும் சிறந்த கேப்டனாக அறியப்படுகிறார். அவரைத் தொடர்ந்து சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி தரமான இளம் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்த்தார். அவருடைய தலைமையில் வளர்ந்த சேவாக், ஹர்பஜன் தோனி, யுவராஜ் சிங் போன்ற அனைவருமே நாளடைவில் ஜாம்பவான்களாக உருவெடுத்தனர்.
அந்தளவுக்கு ஜாம்பவான் வீரர்களை உருவாக்கிய கங்குலி வெளிநாடுகளில் வெல்லும் கலையை இந்திய கிரிக்கெட் அணிக்கு கற்றுக் கொடுத்தார். அதன் பின் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 2007 டி20 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை தோனி வென்று சாதனை படைத்தார். அதே சமயம் தாம் உருவாக்கிய ரோகித் சர்மா, விராட் கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற வீரர்களை வைத்து தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்று காட்டினார்.
சிறந்த கேப்டன் அனில் கும்ப்ளே:
அதைத்தொடர்ந்து பொறுப்பேற்ற விராட் கோலி 2016 – 2021 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். தற்போது கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா 2024 டி20 உலக கோப்பையை வென்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் அனைத்தையும் விட அனில் கும்ப்ளே தாம் பார்த்த சிறந்த இந்திய கேப்டன் என்று யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரிக்கி பாண்டிங்கை போல அணி தடுமாற்றமாக செயல்படும் போது கும்ப்ளே கேப்டனாக தைரியமாக முன்னின்று வழி நடத்துவார் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
ரிக்கி பாண்டிங் மாதிரி:
“நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்த போது (2008இல்) அனில் கும்ப்ளே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அனில் கும்ப்ளே சூழ்நிலை மிகவும் கடினமாக இருக்கும் போது பந்தை மற்றவர்களுக்கு கொடுக்காமல் தாமே தைரியமாக எடுக்கும் அணுகுமுறையை கொண்டவர். அதே போல விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் நான் பந்து வீசுகிறேன் என்று அவர் சொல்வார்”
இதையும் படிங்க: ராகுலை குறைச்சு எடை போடாதீங்க.. ஆஸிக்காக ரோஹித் மாஸ்டர் பிளான் போட்ருக்காரு.. ஹனுமா விஹாரி
“அது போன்ற அணுகுமுறையை கொண்டவர் தான் சிறந்த லீடர் என்று நான் நினைத்தேன். அதனாலேயே ரிக்கி பாண்டிங் போன்ற கேப்டனின் அணுகுமுறையை பற்றி இங்கே நான் பேசுகிறேன். சூழ்நிலை கடினமாக இருக்கும் போது அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் பாண்டிங் அணிக்காக பேட்டிங் செய்வதற்கு தயாராக இருப்பார்” என்று கூறினார். முன்னதாக 2007 பாகிஸ்தான், 2008 ஆஸ்திரேலிய தொடர்களில் மட்டுமே கும்ப்ளே கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.



