ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை 2011 போல இந்திய மகளிரணி சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
அந்த நிலையில் நேற்று மும்பையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல தொடர்நாயகன் விருது முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் 2011 உலகக் கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்து தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற போது ரசிகர்கள் பலரும் திட்டியதாக யுவ்ராஜ் நினைவு கூர்ந்தார்.
2011 உ.கோ பின்னணி:
அப்போது தான் வெளிப்புற சத்தங்களை காதில் வாங்காமல் உலகக்கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்று சச்சின் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சொன்னதாக யுவ்ராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதுவரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. நாங்கள் 28 வருடங்களாக உலகக் கோப்பையை வெல்லவில்லை”
“அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்றோம். அப்போது நாங்கள் ஏராளமான விமர்சனங்களையும் திட்டுக்களையும் சந்தித்தோம். அப்போது எங்களிடம் வந்த சச்சின் மற்றும் கேரி, இங்கிருந்து நாம் கோப்பையை வெல்வதற்கான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக யாரும் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது, செய்தித்தாளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்”
யுவ்ராஜ் அட்வைஸ்:
“களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். களத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். சத்தங்களை நிறுத்தி கோப்பையை வெல்ல முயற்சியுங்கள் என்றும் சச்சின், கேரி சொன்னார்கள். கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம், அது வேலையும் செய்தது”
இதையும் படிங்க: இந்த ஒரு விடயத்திற்காகவே ரோஹித் சர்மா 2027 வேர்ல்டு கப்ல ஆடனும் – ரோஹித்தின் சிறுவயது கோச் கருத்து
“அது உங்களுக்கும் வேலை செய்யும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நாம் இதை செய்தால், அது நமக்கு வேலை செய்யும் என்று நீங்கள் நம்புவதில் அணியாக சேர்ந்து கவனம் செலுத்த வேண்டும். களத்திற்கு செல்லும் போது நாட்டுக்காக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் செல்லுங்கள். மந்தனா, ஹர்மன்ப்ரீத் அவுட்டானால் களத்தில் ஜெமிமா இருக்கிறார் என்று நம்ப வேண்டும். அப்படி 11 பேரும் நம்பிக்கையுடன் சேர்ந்து விளையாடினால் வெற்றி பின்னே வரும்” என்று இந்திய மகளிரணியிடம் உரையாற்றினார்.



