உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்றது. இங்கிலாந்தில் நடைபெற்ற அத்தொடரில் யுவராஜ் சிங் தலைமையில் இந்திய சாம்பியன்ஸ் அணி விளையாடியது. அவருடைய தலைமையில் லீக் சுற்றில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தோற்கடித்த இந்திய சாம்பியன்ஸ் அணி பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவிடம் வரிசையாக தோற்றது.
இருப்பினும் கடைசியில் ரன்ரேட் காரணமாக அதிர்ஷ்டத்துடன் செமி ஃபைனலுக்குள் இந்தியா சாம்பியன்ஸ் அணி நுழைந்தது. அங்கே வலுவான ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி பார்மிங்கம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சாம்பியன்ஸ் தோற்கடித்தது.
தொடர்நாயகன் யூசுப் பதான்:
அந்த வகையில் 2007 டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் பாகிஸ்தானை தோற்கடித்தது போல இம்முறை யுவராஜ் தலைமையில் இந்தியா வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மறுபுறம் 17 வருடங்கள் கழித்தும் இந்தியாவை ஃபைனலில் தோற்கடிக்க முடியாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு 7 போட்டியில் 221 ரன்களை 157.85 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி முக்கிய பங்காற்றிய யூசுப் பதான் தொடர்நாயகன் என்பதை வென்றார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால் இந்த தொடருக்கு தம்மால் முழுமையாக தயாராக முடியவில்லை என்று யூசுப் பதான் தெரிவித்துள்ளார். அப்போது நீங்கள் பேட்டிங்கில் மட்டும் அசத்தினால் போதும் என்று யுவராஜ் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தேர்தலில் நான் நிறைய நேரம் செலவிட்டு பிஸியாக இருந்தேன். அதனால் இங்கே வந்து பெரியளவில் பயிற்சி செய்ய முடியவில்லை. 2 – 3 முறை மட்டுமே பயிற்சி எடுத்தேன். ஆரம்பத்திலேயே 3 தோல்விகளை சந்தித்த போது வெற்றிப் பாதைக்கு திரும்ப உங்களுடைய பங்கு முக்கியமாக இருக்கும் என்று யுவராஜ் என்னிடம் தெரிவித்தார். அதற்காக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்படுமாறு யுவராஜ் சொன்னார்.
இதையும் படிங்க: அதிரடி வேணாம்ன்னு யுவராஜ் சொன்னாரு.. வெற்றிக்கு அந்த 2 பேர் தான் காரணம்.. ஆட்டநாயகன் ராயுடு பேட்டி
“குறிப்பாக அதிரடியாக விளையாட விரும்பினால் அதை செய்யுங்கள் அல்லது பந்துக்கு சமமான ரன்கள் எடுத்தாலும் பரவாயில்லை என்று யுவராஜ் கூறினார். பாகிஸ்தான் சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். அவர்களிடம் ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பவுலர்கள் உள்ளனர். இங்கே எங்கள் குடும்பத்தினர் இருக்க அனுமதி கொடுத்தனர். அதுவும் வெற்றிக்கு உதவியது. இந்தத் தொடரில் விளையாடிய அனைத்து அணிகளின் வீரர்களுமே நாட்டுக்காக விளையாடிய காலத்தில் எப்படி விளையாடினார்களோ அதே போல இப்போதும் விளையாடினார்” என்று கூறினார்.



