ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் விராட் கோலி தம்முடைய கேரியரில் கிட்டத்தட்ட ஏராளமான சாதனைகளை படைத்து கோப்பைகளை வென்றுள்ளார். குறிப்பாக 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2011 உலகக் கோப்பையில் தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்றார். அத்துடன் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்ற அவருடைய கேரியரில் டி20 உலகக் கோப்பை மட்டுமே குறையாக இருந்தது.
யூனிஸ் கான் கோரிக்கை:
தற்போது அதையும் வென்றுள்ள விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் விராட் கோலி தம்முடைய கேரியரில் கிட்டத்தட்ட அனைத்து சாதனைகளையும் செய்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலி தனது கேரியரில் பாகிஸ்தான் மண்ணில் ஒருமுறை கூட விளையாடியதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனவே மீதம் இருக்கும் அந்த ஒரே குறையை தீர்த்துக்கொள்ள விராட் கோலி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி பாகிஸ்தானின் நியூஸ் 24 தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட விராட் கோலி பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக வரவேண்டும். அதுவே எங்களுடைய விருப்பமாகும்”
“விராட் கோலியின் கேரியரில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் நாட்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தாததே மீதமிருக்கும் ஒரே குறை என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார். முன்னதாக எல்லைப் பிரச்சனை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதிய கேப்டனான சூரியகுமார் யாதவை கண்டதும் பாண்டியா கூறிய வாழ்த்து – விவரம் இதோ
மறுபுறம் 2008இல் இந்தியாவுக்காக விராட் கோலி அறிமுகமானார். அதனால் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் வாய்ப்பு இதுவரை விராட் கோலிக்கு மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவுக்கும் கிடைக்கவில்லை. அந்த சூழ்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று இந்தியா சொல்லி வருகிறது. அதனால் தங்களுடைய வாழ்நாளில் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கான வாய்ப்பை விராட் மற்றும் ரோஹித் சர்மா பெறுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது.



