
கடந்த 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 53 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 9 அரைசதம் என 1607 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு அறிமுகமாகிய அவர் இதுவரை 23 போட்டிகளில் விளையாடின் 1 சதம் மற்றும் 5 அரைசதம் என 723 ரன்கள் குவித்துள்ளார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 19 போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 10 அரைசதம் என 1798 ரன்களை குவித்துள்ளார்.
இப்படி இந்திய டெஸ்ட் மற்றும் டி20 அணியில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பாரா? என்று கேட்டால் அது நிச்சயம் சந்தேகம் தான். அந்த அளவிற்கு இந்திய ஒருநாள் அணியின் பிளேயிங் லெவன் மிகவும் பலமான வரிசையில் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து ஜெய்ஸ்வால் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் பெரிய பெரிய சிக்ஸர்களை அடிப்பதற்கு காரணமே ஐபிஎல் தொடர் தான். ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எனக்கு ஒரு நல்ல அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த பயிற்சியின் மூலம் தான் என்னால் சிறப்பாக விளையாட முடிகிறது. அதுமட்டும் இன்றி பெரிய சிக்ஸர்களை அடிக்க காரணமே ஜூபின் பருச்சா சார் தான்.
கடந்த சில வருடங்களாக அவர் எனக்கு பல்வேறு வகைகளில் உதவி வருகிறார். அவரது பயிற்சியில் தான் நான் பெரிய பெரிய சிகர்களை அடிக்க கற்றுக் கொண்டேன். தற்போது இந்திய ஒருநாள் அணியிலும் இடம் எனக்கு கிடைத்திருக்கிறது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது? ஆனால் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் உற்சாகமாக இந்திய அணிக்கு பங்களிக்க விரும்புகிறேன் என்று ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நான் ஒன்னும் பும்ரா கிடையாது.. ஆனாலும் நாட்டுக்காக இதை செய்வேன் – ஹார்டிக் பாண்டியா கருத்து
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த ரோகித் சர்மாவை அவர் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் முறியடித்திருந்தார். ரோகித் சர்மா தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் தொடரில் 19 சிக்ஸர்களை அடித்திருந்த வேளையில் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 26 சிக்ஸர்களை அடித்து அவரை முந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.