தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடாத வேளையில் அவருக்கு பதிலாக மாற்று துவக்க வீரராக இளம் நட்சத்திர இடது கை ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக பயன்படுத்தி உள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
தெ.ஆ ஒருநாள் தொடர் முடிந்த கையோடு புதிய முடிவை எடுத்த ஜெய்ஸ்வால் :
அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பெரிய அளவில் ரன் குவிக்காத அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 121 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 116 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்து மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய வீரராகவும் 23 வயதிலேயே மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஒருநாள் தொடர் முடிந்த கையோடு டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முக்கிய முடிவினை ஜெய்ஸ்வால் கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத அவர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.
23 வயதான இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்துள்ள வேளையில் ஒருநாள் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளிலும் அவர் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் தற்போது டி20 அணிகள் பல்வேறு வீரர்கள் துவக்க வீரருக்கான போட்டியில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.
இதையும் படிங்க : 2007 மாஸ்டர்ஸ்ட்ரோக் மாதிரி.. திறமையான தோனி இந்தியாவில் பிறக்க நாம் பெருமைப்படனும்.. முரளி விஜய்
இந்நிலையில் சையத் முஷ்டாக் அலி தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் டி20 அணியில் இடம் பிடிப்பதற்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



