
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 கிரிக்கெட் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 10 தோல்விகள் என வெறும் 8 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியுள்ளது. இந்த சீசன் ஆரம்பிக்கும்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணி இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வேளையில் அந்த அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது அந்த அணியில் இருந்து வெளியேற இருப்பதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவே காரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 14 போட்டிகளில் விளையாடி 559 ரன்கள் குவித்து அந்த அணியின் சார்பாக அதிக ரன்கள் வீரராக திகழ்கிறார். இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரில் அவர்களது அணி விளையாடி முடித்துள்ள கையோடு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதில் குறிப்பிட்டதாவது :
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி. நாம் எதிர்பார்த்தபடி இந்த சீசன் அமையவில்லை. ஆனால் இந்த பயணத்திற்கு தொடர்ந்து நன்றியுடன் இருக்கிறேன். அடுத்த சவால் மற்றும் எதிர்காலம் என்ன கொண்டு வருகிறதோ அதை பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு அவர் வேறொரு அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து இந்த பதிவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெளியிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் இதுவரை 67 போட்டிகளில் விளையாடி 152 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2166 ரன்களை குவித்துள்ளார். அதில் 2 சதம் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக நியூசிலாந்து அதிரடி வீரரை ஒப்பந்தம் செய்த ஆர்.சி.பி – வேறலெவல் சாய்ஸ் தான்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான அவர் அங்கிருந்தே இந்திய அணிக்காக விளையாட தேர்வானார். ஒரு இளம்வீரராக ஐ.பி.எல் தொடருக்குள் வந்த அவரது தற்போதைய நட்சத்திர அந்தஸ்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ஒரு முக்கிய காரணம் என்றால் அதுமிகையல்ல.