இளம் கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த வருடம் முதல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ஐசிசி 2020 அண்டர்-19 உலகக்கோப்பையில் 400 ரன்கள் அடித்து இந்தியா ஃபைனலுக்கு செல்ல உதவிய அவர் ஐபிஎல் தொடரிலும் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்தார். அதனால் கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார்.
அந்த வாய்ப்பில் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அதே போல 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் சதமடித்த அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அதன் பின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் 712 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ரோஹித் சர்மாவிடம்:
அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவிய அவர் தொடர்நாயகன் விருதை வென்றார். அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த தலைமுறை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை பார்த்து உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கற்றுக் கொள்ளாத சில விஷயங்களை தெரிந்து கொண்டதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
குறிப்பாக பிட்ச்களை புரிந்து கொள்வது, அதற்கு தகுந்தார் போல் ஆட்டத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் கியரை மாற்றி அதிரடியாக விளையாடுவது போன்றவற்றை அவரிடம் கற்றுக் கொண்டதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடன் களத்திற்கு சென்று பேட்டிங் செய்வது சிறந்த அனுபவம்”
தெரியாத நுணுக்கங்கள்:
“அவர் தனது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார். பிட்ச்சை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போட்டியை அவர் கட்டுப்படுத்தும் விதத்தை நான் கற்றுக் கொள்கிறேன். வேகத்துக்கு அல்லது சுழலுக்கு சாதகமான மைதானங்களில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகள் விழும் போது உங்களுடைய பேட்டிங்கை எப்படி அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்பதை அவரிடம் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்”
இதையும் படிங்க: 12 ஃபோர்ஸ் 5 சிக்ஸ்.. 320 ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்காட்லாந்தை பொளந்த டிராவிஸ் ஹெட்.. மிரட்டல் உலக சாதனை
“அதனால் தற்போது நான் சூழ்நிலைகளை படித்து அதற்கு தகுந்தார் போல் எனது ஆட்டத்தை மாற்றுகிறேன். கடந்த ஒரு வருடங்களில் இவற்றை நான் செய்து வருகிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய போது இது போன்ற பல விஷயங்கள் எனக்குத் தெரியாது. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியது முதல் போட்டியை படிப்பதில் நான் கொஞ்சம் முன்னேறியுள்ளேன். இப்படி தொடர்ந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.