தனி ஒருவனாக போராடும் ஜெய்ஸ்வால்.. டிராவிட், கோலிக்கு நிகராக.. முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை

Jaiswal 600
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 106* ரன்கள் எடுத்தார்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 219/7 ரன்கள் எடுத்து தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஜெயிஸ்வால் சாதனை:
இருப்பினும் இன்னும் 134 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணிக்கு களத்தில் துருவ் ஜூரேல் 30*, குல்தீப் யாதவ் 17* ரன்களுடன் போராடி வரும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 4 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே 22 வயதாகும் ஜெய்ஸ்வால் சிம்ம சொப்பனமாக விளையாடி வருகிறார். குறிப்பாக இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் அடித்த அவர் மூன்றாவது போட்டியில் 12 சிக்ஸருடன் 219* ரன்கள் விளாசி இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

அந்த நிலையில் இப்போட்டியில் எடுத்த 73 ரன்களையும் சேர்த்து இத்தொடரில் இதுவரை அவர் 618* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 600 ரன்கள் அடித்த முதல் இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007இல் பாகிஸ்தானுக்கு எதிராக சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக 534 ரன்கள் எடுத்ததே ஒரு தொடரில் இந்திய இடது கை பேட்ஸ்மேன் குவித்த முந்தைய அதிகப்பட்ச ரன்களாகும்.

- Advertisement -

அத்துடன் ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் திலிப் சர்தேசாய் (1971), சுனில் காவாஸ்கர் (1971, 1978), ராகுல் டிராவிட் (2002, 2003), விராட் கோலி (2014, 2016, 2017) ஆகியோரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அது உலக அளவில் போக 23 வயதுக்குள் ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அடித்த 7வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 219 ரன்ஸ் தானா? கைவிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள்.. போராடிய ஜெய்ஸ்வால்.. இந்தியாவின் ஆட்டத்தால் ரசிகர்கள் கவலை

இதற்கு முன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், இந்தியா ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் நெயில் ஹார்வி, வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் ஹெட்லி ஆகியோரும் 22 வயதுக்கு முன்பே ஒரு தொடரில் 600 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement