இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் துவங்கியுள்ளது. ஜூன் இருபதாம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் 359/3 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 42 ரன்களில் அவுட்டானார். ஆனால் அவருடன் சேர்ந்து விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்து அசத்தினார். அறிமுக வீரர் சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் கேப்டன் சுப்மன் கில் தனது முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து 127* ரன்கள் விளாசி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
முதல் போட்டியிலேயே அமர்க்களம்:
அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 65* ரன்கள் விளாசி அசத்தினார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே 171 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். பின்னர் கடந்த 2024இல் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய அவர் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்தார்.
அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவிய அவர் தொடர்நாயகன் விருது வென்றார். அதே வேகத்தில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் பெர்த் நகரில் விளையாடிய தனது முதல் போட்டியில் 161 ரன்கள் விளாசிய ஜெய்ஸ்வால் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். தற்போது இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தனது முதல் போட்டியிலும் ஜெய்ஸ்வால் சதத்தை அடித்துள்ளார்.
தனித்துவ உலக சாதனை:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய தனது அறிமுகப் போட்டியிலேயே சதத்தை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற எந்த ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாடிய தங்களது அறிமுகப் போட்டியிலேயே சதத்தை அடித்ததில்லை.
இதையும் படிங்க: நானும் சுப்மன் கில்லும்.. இதைத் தான் பேசி வெச்சு பார்ட்னர்ஷிப் போட்டு சதமடிச்சோம்.. ஜெய்ஸ்வால் பேட்டி
குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 வயதில் இங்கிலாந்தில் விளையாடிய 2வது போட்டியில் தான் சதத்தை அடித்தார். 19 வயதில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய சச்சின் போது தன்னுடைய 3வது போட்டியில் தான் சதத்தை அடித்தார். ஆனால் வெளிநாட்டில் முதல் போட்டியிலேயே சதத்தை அடிப்பதே தம்முடைய ஸ்டைல் என்ற வகையில் ஜெய்ஸ்வால் அசத்தி வருகிறார்.



