வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா களமிறங்கியுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஜூலை 12ஆம் தேதி டாமினிக்கா நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் அலிக் அதேன்சி 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய அறிமுக போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் புதிய ஓப்பனிங் ஜோடியாக களமிறங்கி முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தம்முடைய கேரியரை அட்டகாசமாக துவங்கினார். குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2023 டி20 தொடரில் அதிவேக அரை சதமடித்த வீரராக ஆல் டைம் சாதனை படைத்த போதிலும் இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரித்தான நிதான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் முதல் ஆளாக அரை சதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுபடுத்தினார்.
மற்றுமொரு சரித்திரம்:
நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணிக்கு சவாலை கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த 17வது இந்திய வீரர் மற்றும் 3வது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனைகளை படைத்தார். மறுபுறம் அவருடன் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய தரத்தை காட்டி சதமடித்து 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 200 ரன்கள் முதல் முறையாக குவித்து அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் (229) அமைத்த இந்திய ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர்.
அந்த நிலைமையில் வந்த சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த விராட் கோலி நங்கூரமாக செயல்பட்ட நிலையில் இன்று துவங்கிய 3வது நாளில் 147 ரன்களில் இருந்த ஜெய்ஸ்வால் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் 150 ரன்கள் கடந்து நல்ல துவக்கத்தை பெற்ற அவர் அந்த இலக்கை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அல்சாரி ஜோசப் வேகத்தில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 171 (387) ரன்கள் குவித்து ஆட்டமிழந்ததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதமடிக்கும் முதல் இந்தியர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.
ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் அறிமுக இன்னிங்ஸிலேயே 150க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனையை படைத்த ஜெய்ஸ்வால் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 1996இல் இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சௌரவ் கங்குலி அதிகபட்சமாக தம்முடைய அறிமுக இன்னிங்ஸில் 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
சொல்லப்போனால் 2013இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹைதராபாத் மைதானத்தில் ஷிகர் தவான் 183 ரன்களும் 2013இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரோஹித் சர்மா 177 ரன்களையும் தங்களுடைய அறிமுக இன்னிங்ஸில் எடுத்துள்ளனர். இருப்பினும் அது இந்திய மண்ணில் எடுத்தது என்ற நிலைமையில் இந்த சிறப்பான சாதனையை படைத்து அவுட்டான ஜெய்ஸ்வாலுக்கு பின் வந்த துணை கேப்டன் ரகானே 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனாலும் மறுபுறம் அசத்தி வரும் விராட் கோலி 72* ரன்களும் ரவீந்திர ஜடேஜா 21* ரன்களும் எடுத்து வருவதால் சற்று முன் வரை 400/4 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 250 ரன்கள் முன்னிலை பெற்று இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.



