இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விரிதிமான் சாஹா தற்போது 40 வயதை எட்டியுள்ள நிலையில் நடைபெற்று வரும் ரஞ்சி தொடரோடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 9 ஒருநாள் போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக இதுவே காரணம் :
அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்த அவர் 170 போட்டிகளில் விளையாடியுள்ளார். திறமையான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருந்தாலும் தோனியின் ஆதிக்கம் காரணமாக அவருக்கு பெரிய அளவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இருந்தாலும் அவற்றிற்கு இடையே போராடி 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அவர் விளையாடியுள்ளார். அது தவிர்த்து இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 சதம் மற்றும் 6 அரைசதம் என 1353 ரன்கள் குவித்துள்ள அவர் 92 கேட்ச்கள் மற்றும் 12 ஸ்டம்பிங்கையும் செய்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று வெளியேறியுள்ள அவர் இந்திய அணியில் தான் தொடர்ச்சியாக வாய்ப்பு பெறாமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்பது குறித்தும் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எனக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன்.
அப்படி சொன்னால் நான் சுயநலமான நபர் என்று ஆகிவிடுவேன். என்னுடைய செயல்பாடு முழுமையான திருப்தியை அளித்திருக்காததால் நான் தேர்வு செய்யப்படாமல் இருந்திருக்கலாம். அப்படி இல்லை என்றால் ஒருவேளை நான் என்னை தாண்டி இருக்கும் விக்கெட் கீப்பரை விட சிறந்த வீரராக இல்லாமல் இருந்திருக்கலாம். அதனாலேயே எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய் இருக்கலாம்.
இதையும் படிங்க : ஷிவம் தூபேவிற்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்பட்டது ஏன்? – சூரியகுமார் யாதவ் விளக்கம்
இருந்தாலும் இந்திய அணிக்காக கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக உணர்கிறேன், கடந்த 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய என் வாழ்க்கை தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இனிமேல் என் நண்பர்களுடன் வெளியில் செல்வேன் என விரிதிமான் சஹா கூறியது குறிப்பிடத்தக்கது.



