IND vs SA : தயவு செஞ்சு 2வது தர டீம்’னு சொல்லாதீங்க – இந்தியாவை வெளிப்படையாக பாராட்டும் தெ.ஆ வீரர்

IND
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. லக்னோவில் 40 ஓவர்களாக நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்களை துரத்தும் போது கேப்டன் தவான் உள்ளிட்ட டாப் 4 பேட்ஸ்மேன்கள் மிகவும் மெதுவாக விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டாகி 51/4 என்று கொடுத்த மோசமான தொடக்கம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அதன்பின் ஷ்ரேயாஸ் 50, தாகூர் 33, சஞ்சு சாம்சன் 86* என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி முடிந்தளவுக்கு போராடியும் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

INDvsRSA

- Advertisement -

இதனால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர அக்டோபர் 9ஆம் தேதியன்று ராஞ்சியில் நடைபெறும் 2வது போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் கச்சிதமாக செயல்பட்ட தென்னாப்பிரிக்கா நடைபெற்று முடிந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு இன்றைய போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை கைபற்றி பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது.

2வது தர அணியல்ல:
முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி விரைவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது. அதனால் இத்தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட 2வது தர இந்திய அணி விளையாடி வருகிறது. ஒரு காலத்தில் முதன்மை அணிக்கே தேவையான வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்தியாவுக்கு கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் அபார வளர்ச்சியால் ஒவ்வொரு வருடமும் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த இளம் வீரர்கள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றனர்.

Shikhar Dhawan Team India

அதன் பயனாக கடந்த வருடம் முதல் முறையாக இங்கிலாந்தில் விராட் கோலி தலைமையில் முதன்மை அணி டெஸ்ட் தொடரில் விளையாடிய போது ஷிகர் தவான் தலைமையில் இதே போல் இளம் இந்திய அணி இலங்கையில் விளையாடியது. அதனால் இது போன்ற சிறிய தொடர்களில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுத்து உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்கு தயாராக போதிய நேரம் கிடைக்கிறது. அதற்காக இளம் அணி சுமாரானது என்று சொல்லவே முடியாது. ஏனெனில் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடைபெற்ற அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில் இதே இளம் அணி அட்டகாசமாக விளையாடி வெளிநாடுகளில் விளையாடி வெற்றி வாகை சூடியது.

- Advertisement -

அந்த வகையில் தங்களுக்கு எதிராக விளையாடும் தற்போதைய அணியை 2வது தர அணி என்றும் நாங்கள் எப்போதும் சொல்ல மாட்டோம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் பாராட்டியுள்ளார். மேலும் ஒரே நேரத்தில் 4 – 5 சர்வதேச அணிகளை அமைக்கும் அளவுக்கு இந்தியாவிடம் ஏராளமான திறமைகள் உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ராஞ்சி போட்டிக்கு முன்பாக பேசியது பின்வருமாறு. “இந்த அணியை 2வது தர இந்திய அணி என்று நான் அழைக்கமாட்டேன். இந்தியாவிடம் அதிகப்படியான திறமைகள் இருப்பதால் அவர்கள் 4 – 5 சர்வதேச அணிகளை உருவாக்க முடியும். ஏற்கனவே கூறுவது போல அவர்களிடம் ஐபிஎல் காரணத்தால் சர்வதேச அளவிற்கு தகுந்த அனுபவம் வாய்ந்த நிறைய வீரர்கள் உள்ளனர்”

Keshav-Maharaj

“அவர்களிடம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக விளையாட எப்போதும் நாங்கள் விரும்புகிறோம். அதற்காக எப்போதும் நீங்கள் தயாராக இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அவர்களிடம் உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீப காலங்களில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே போன்ற எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் சாய்த்த இதே இளம் இந்திய அணி தற்போது தன்னுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை சாய்க்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Advertisement