- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs WI : மிரட்டலான பவுலிங், வலுவான இந்தியாவை முதல் முறையாக சாய்த்து வெ.இ பதிலடி கொடுத்தது எப்படி – முழுவிவரம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற வெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் துவங்கியது. ஆனால் வீரர்களின் லக்கேஜ் வருவதற்கு தாமதம் என்ற வேடிக்கையான காரணத்தால் 10 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்ட அப்போட்டி மேலும் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஓபேத் மெக்காய் வீசிய போட்டியின் முதல் பந்திலேயே கேப்டன் ரோகித் சர்மா கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அந்த சில ஓவர்களில் சூர்யகுமார் யாதவ் 11 (6) ரன்களில் அவுட்டானதால் 17/2 என்ற சுமாரான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவிற்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) ரன்களிலும் ரிஷப் பண்ட் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (12) ரன்களிலும் அவுட்டானார்கள்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதனால் 61/4 என மேலும் தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் காப்பாற்ற முயன்ற ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (31) ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 27 (30) ரன்களிலும் அவுட்டாகி பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க தவறினர். அந்த நிலைமையில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்கும் போராடி 7 (13) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்களும் வெஸ்ட் இண்டீசின் தரமான பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

அதனால் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா வெறும் 138 ரன்களுக்கு பரிதாபமாக ஆல்-அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அற்புதமாக செயல்பட்ட ஓபேத் மெக்காய் 6 விக்கெட்டுகளையும் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 139 என்ற சுலபமான இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு பிரண்டன் கிங் – கெய்ல் மேயர்ஸ் ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 46 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

அதில் கெய்ல் மேயர்ஸ் 8 (14) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 (11) ரன்களில் அவுட்டாகி சென்றார். அடுத்த சில ஓவர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிம்ரோன் ஹெட்மையர் 6 (10) ரன்களில் ஆட்டமிழந்தார் ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக 8 பவுண்டரி 2 சிக்சருடன் அரைசதம் அடித்து 68 (52) ரன்கள் குவித்த பிரண்டன் கிங் வெற்றியை உறுதி செய்து 16-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

முதல் வெற்றி:
இறுதியில் ரோவ்மன் போவல் 5 (8) ரன்களில் ஆட்டமிந்தாலும் மறுபுறம் 1 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட ட்வயன் தாமஸ் 31* (19) ரன்கள் குவித்து தேவையான பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரிலேயே 141 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த தொடர் தோல்விகளால் வைட்வாஷ் தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வி அவமானத்திற்கு உள்ளான வெஸ்ட் இண்டீஸ் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த நிம்மதி அடைந்துள்ளது.

- Advertisement -

மேலும் 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ள அந்த அணி டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே நாங்கள் பலமானவர்கள் என்பதை நிரூபித்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதில் சாய்ந்து விடமாட்டோம் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு காரணம் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் மோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகிய அனைவருமே அதிரடி காட்ட முயன்றாலும் பொறுப்புடன் 50 ரன்கள் கூட பார்ட்னர்ஷிப் அமைக்காததே தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

இதையும் படிங்க: IND vs WI : ஒவ்வொரு தொடருக்கும் ஓப்பனிங் வீரர்களை மாற்றாதீங்க, சாம்சனை நம்புங்க – அணி நிர்வாகத்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

ஏனெனில் 150 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் பந்து வீச்சில் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு மடக்கிப் பிடிக்க முயன்ற அஷ்வின், ஜடேஜா, பாண்டியா, அர்ஷ்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்து வெஸ்ட் இண்டீஸை எளிதாக வெற்றி பெற விடாமல் 20-வது ஓவர் வரை அழைத்து வந்து இந்தியாவின் வெற்றிக்காக முடிந்தளவுக்கு போராடினர். எனவே சுமாரான பேட்டிங் மற்றும் பார்ட்னர்ஷிப் அமைக்காதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியதான்ல் அடுத்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -
Published by