
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. அதில் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் 3ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கெய்ல் மேயர்ஸ் 1 (7) ப்ரெண்டன் கிங் 28 (19) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சஹால் சுழலில் சொற்ப ரன்களில் அவுடடாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் 3 (6) ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் ஆட்டமிழந்தார். அதனால் 58/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் இப்போது பூரான் 2 பவுண்டரில் 2 சிக்சருடன் 41 (34) ரன்களில் அவுட்டாகி சென்றார்.
அந்த நிலையில் வந்த சிம்ரோன் ஹெட்மயர் தடுமாறி 10 (12) ரன்னில் அவுட்டாக மறுபுறம் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட கேப்டன் போவல் 48 (32) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரோமாரியா செபாஃர்ட் 4*, ஜேசன் ஹோல்டர் 6* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 149/6 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சஹால் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அதைத்தொடர்ந்து 150 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 3 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க மறுபுறம் தடுமாறிய இசான் கிசானும் 6 (9) ரன்னில் நடையை கட்டினார். அதனால் 28/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 (22) ரன்கள் எடுத்து ஜேசன் ஹோல்டர் வேகத்தில் அவுட்டாக எதிர்ப்புறம் தன்னுடைய அறிமுக போட்டியில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சரவெடியாக 1 பவுண்டரி 3 சிக்சரை விளாசி நம்பிக்கை கொடுத்த போதிலும் 39 (22) ரன்களில் அவுட்டானார்.
அதனால் 77/4 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற போராடிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சவாலான பிட்ச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறி 19 (19) ரன்களில் அவுட்டாக அதே ஓவரிலேயே எதிர்புறமிருந்த சஞ்சு சாம்சன் பொறுப்பின்றி 12 (12) ரன்களில் ரன் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அதன் காரணமாக கேள்விக்குறியான இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரின் 37 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது களத்திற்கு வந்த குல்தீப் யாதவ் அதிக பந்துகளை எதிர்கொண்டு சிங்கள் எடுக்கவே தடுமாறினார்.
அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் எதிர்ப்புறம் அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அக்சர் பட்டேல் 1 சிக்சர் அடித்தாலும் 13 (11) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த அர்ஷிதீப் 2 பவுண்டரிகள் அடித்ததால் ரோமாரியா செபார்ட் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் குல்தீப் யாதவ் 3 (9) ரன்னில் அவுட்டாகி சென்றார். இறுதியில் அர்ஷிதீப்பும் 12 (7) ரன்னில் போராடி அவுட்டானதால் 20 ஓவரில் 145/9 ரன்களுக்கு இந்தியாவை கட்டுப்படுத்தி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர், ரொமாரியா செபாஃர்ட், ஓபேத் மெக்காய் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இப்போட்டியில் பந்து வீச்சில் குறைந்தது 170 ரன்கள் அடிக்க வேண்டிய வெஸ்ட் இண்டீஸை சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்திய இந்தியா வெற்றியை ஆரம்பத்திலேயே பாதி வசமாகியது என்றே சொல்லலாம். ஆனாலும் இப்போட்டி நடைபெற்ற பிரையன் லாரா மைதானம் நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டி உட்பட சேசிங் செய்வதற்கு வரலாற்றில் கடினமாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க:IND vs WI : அதிரடி துவக்கத்தை பெற்ற வெ.இ – துல்லியமான பந்து வீச்சால் அடக்கிய இந்தியா, ட்ரிக்கான இலக்கை சேசிங் செய்யுமா?
எனவே அதில் ஒருநாள் கிரிக்கெட்டைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலே வென்றிருக்கக்கூடிய இந்தியா கடினமான பிட்ச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தன்னுடைய 200வது போட்டியில் தோல்வியை கொடுத்தது. குறிப்பாக திலக் வர்மா தவிர்த்து யாருமே அதிரடியாக விளையாட முடியாத அளவுக்கு அசத்திய வெஸ்ட் இண்டீஸ் உலகின் நம்பர் ஒன் டி20 அணியான இந்தியாவை தோற்கடித்து 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.