இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் சமன் செய்தது. இங்கிலாந்தில் விராட், ரோஹித் இல்லாததால் படுதோல்வியை சந்திக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா தொடரை சமன் செய்து அசத்தியது. அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது.
2012 முதல் இந்தியா தொடர்ச்சியாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டது. அந்த வெற்றி நடை கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றதால் முடிவுக்கு வந்தது. அதனாலேயே விராட், ரோஹித் போன்ற மூத்த வீரர்களை கழற்றி விட்ட பிசிசிஐ இளம் அணியை உருவாக்கியுள்ளது.
நியூஸிலாந்து மாதிரி:
அந்த அணி சொந்த மண்ணில் எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் நியூஸிலாந்தை போலவே தாங்களும் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து வெல்வோம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். அதற்காக இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகள் எடுப்பதற்குத் தேவையான சமர் ஜோசப், அல்சாரி ஜோசப், ஜெய்டேன் சீல்ஸ் போன்ற தரமான பவுலர்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எவ்விதமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய வேகப்பந்து வீச்சு கூட்டணியை நாங்கள் கண்டறிந்துள்ளோம். உலகின் அனைத்து பகுதிகளிலும் அந்த 6 – 8 மீட்டர் லென்தில் பவுலிங் செய்வது முக்கியம். ஆனால் எங்களுடைய அணியில் தங்களுடைய சொந்த வழியில் வித்தியாசமான வெரைட்டி கொண்ட 4 பவுலர்கள் உள்ளனர்”
இந்தியாவை சாய்ப்போம்
“எங்களிடம் சறுக்கலான பந்துகளை வீசக்கூடிய சமர ஜோசப், முன்னங்காலில் வலுவாக பந்தை இருபுறமும் ஸ்வீட் செய்யக்கூடிய சீல்ஸ், தன்னுடைய உயரத்தை வைத்து பவுன்ஸை உருவாக்கக்கூடிய அல்சாரி உள்ளனர். எனவே எங்களால் 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவில் அதை செய்யாவிட்டால் நீங்கள் பின்னங்காலில் செல்ல வேண்டும். நாங்கள் 6 – 8மீ லைன், லென்த்தை மாற்ற மாட்டோம்”
இதையும் படிங்க: தோனி தான் என்னோட இன்ஸ்பிரேஷன்.. அவரை ஒரு நாள் மீட் பண்ணனும் – விருப்பத்தை வெளிப்படுத்திய ஓமன் வீரர்
“எங்களால் பிட்ச்சுக்கு தகுந்தாற் போல் செயல்பட்டு 20 விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். போட்டிக்கு முந்தைய 10 நாட்களில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எப்படி வீழ்த்துவது என்பதற்கு தகுந்தார் போல் நாங்கள் திட்டமிடுவோம். இந்தியா கடினமான நாடு என்று நாங்கள் நினைக்க மாட்டோம். அங்கே அற்புதமாக வென்ற நியூசிலாந்தை நாங்கள் உத்வேகமாக எடுத்துக் கொள்வோம். நியூசிலாந்தை போல நாங்களும் இந்திய சூழ்நிலைகளில் எங்களது வீரர்களை வைத்து அசத்த முயற்சிப்போம்” என்று கூறினார்.



