வங்கதேசத்தை இழுத்தாலும் எங்கள ஒன்னும் பண்ண முடியாது – ஒரு கை பாத்துடலாம், இந்தியாவுக்கு ரமீஸ் ராஜா மீண்டும் எச்சரிக்கை

Ramiz Raja IND vs Pak
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 10 வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆசிய கோப்பையில் 2 முறை சந்தித்த இவ்விரு அணிகளும் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மோதின. அதில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா அசாத்தியமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகளும் 2023இல் ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் மோதுவது உள்ளது என்றாலும் அது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

ஏனெனில் வரலாற்றின் 16வது ஆசியக் கோப்பையை தங்களது நாட்டில் நடத்தும் உரிமையை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் நிகழ்ந்த ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் வாங்கியது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக ஆசிய கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா பயணிக்காது என்று கடந்த மாதம் பிசிசிஐ செயலாளராகவும் இருக்கும் ஜெய் ஷா அறிவித்தார். இருப்பினும் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அவர் இப்படி பேசியது ஏமாற்றத்தை கொடுப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் வாரியம் தங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் அதே 2023இல் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை பங்கேற்க நாங்களும் வர மாட்டோம் என்று தெரிவித்தது.

மீண்டும் எச்சரிக்கை:

இருப்பினும் ஐசிசியை விட பணக்கார வாரியமாக இருக்கும் பிசிசிஐ பாகிஸ்தான், இலங்கை போல் ஆசிய கவுன்சிலில் கிடைக்கும் வருமானத்தை பங்கு போடாமல் அதற்கு நிதி கொடுக்கும் நாடாக உள்ளது. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்காமல் போனால் ஐசிசியிடம் இருந்து கிடைக்கும் பங்கு பணமும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது. அதனால் பிசிசிஐ எடுக்கும் முடிவுக்கு பாகிஸ்தான் வளைந்தாக வேண்டும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கும் நிலையில் ஏற்கனவே அறிவித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கடந்த வாரம் அந்நாட்டு வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அதிரடியாக அறிவித்தார்.

Jay-Shah

அதை விட கடந்த வருடம் டி20 உலக கோப்பையிலும் இந்த வருடம் ஆசிய கோப்பையிலும் மில்லியன் டாலர் இந்திய அணியை தோற்கடித்து 2022 டி20 உலக கோப்பையில் ஃபைனல் வரை முன்னேறி அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் தங்கள் அணி பங்கேற்காத 2023 உலக கோப்பையை யார் பார்ப்பார்கள் என்றும் அவர் பதிலடி கொடுத்தார். அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லக்கூடாது என்று முடிவெடுத்து விட்டால் அதன் நட்பு நாடாக கருதப்படும் வங்கதேசமும் ஆசியக் கோப்பையை புறக்கணிக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தார்கள்.

- Advertisement -

அத்துடன் என்ன ஆனாலும் ஆசியக் கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவோம் என்று ஜெய் ஷா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வங்கதேசம் தங்களது நாட்டுக்கு வரவில்லை என்றால் நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று அறிவித்துள்ள ரமீஸ் ராஜா என்ன ஆனாலும் ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை பிசிசிஐ தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி 2023 ஆசிய கோப்பையை பொதுவான இடத்தில் நடத்தினால் நாங்கள் அதில் பங்கற்கே மாட்டோம் என்று அறிவித்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Ramiz Raja

“ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எங்களுக்கு அந்த தொடரை நடத்துவதற்கான உரிமையை கொடுத்துள்ளது. அதில் பிசிசிஐ சில அரசியல் செய்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனவே அவர்கள் விரும்பினால் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறலாம். ஆனால் இந்த தொடரை எங்களிடமிருந்து பறித்து பொதுவான இடத்தில் நடத்துவது ஒருபோதும் நடக்காது. அதே போல் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் நாங்கள் தொடரை நடத்தும் நாடாக அதில் பங்கேற்போம்”

“நாங்கள் ஒன்றும் எங்களுக்கு கொடுக்கப்படாத உரிமையை கேட்கவில்லை. ஒருவேளை இந்தியாவுடன் சேர்ந்து கொண்டு வங்கதேசம் வரவில்லை என்றாலும் அது அவர்களது விருப்பம். ஆனால் இந்த ஆசிய கோப்பை எங்கள் நாட்டிலிருந்து வெளியே நடக்கும் பட்சத்தில் அதிலிருந்து நாங்கள் வெளியேறுவோம்” என்று உடும்பு புடியாக பிசிசிஐக்கு மீண்டும் எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.

Advertisement