இப்போ இல்ல இனிமேல் எப்போதுமே அந்த 2 பேருக்கு சான்ஸ் கிடையாது – வெ.இ வாரியம் அதிரடி, காரணம் என்ன

Russell
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு ஆயத்தமாகி வரும் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் 2012, 2016 ஆகிய வருடங்களில் வென்று 2 டி20 உலக கோப்பைகளை வென்ற ஒரே அணியாகவும் வெற்றிகரமான அணியாகவும் திகழும் வெஸ்ட் இண்டீஸ் இம்முறை நிக்கோலஸ் பூரன் தலைமையில் களமிறங்குகிறது. ஆனால் ஒரு காலத்தில் அதிரடி சரவெடியாக செயல்பட்டு 2 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த கிறிஸ் கெயில், ட்வயன் ப்ராவோ போன்ற முக்கிய வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்த அந்நாட்டு வாரியம் சமீப காலங்களில் இளம் வீரர்களுடன் விளையாடி நிறைய தோல்விகளைச் சந்தித்தது.

அதனால் தரவரிசையில் கீழே போன அந்த அணி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து போன்ற டாப் அணிகள் பங்கேற்கும் முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. மாறாக ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளுடன் தகுதி சுற்றில் களமிறங்கி அதில் வென்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற பரிதாப நிலைமையில் உள்ளது.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட ரசல், நரேன்:
முக்கிய வீரர்கள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தங்களது அணிக்கு தேசப்பற்றுடன் விளையாடாமல் ஐபிஎல் போன்ற வெளிநாட்டு டி20 தொடரில் பணத்துக்காக விளையாட சென்றதே இதற்கு முக்கிய காரணமாகும். அதில் கெயில், ப்ராவோ ஆகியோர் வயது காரணமாக கடந்த வருடமே ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் கேப்டனாக இருந்த பொல்லார்ட் டி20 லீக் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் பகிரங்கமாக அறிவித்தார்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடிப்படையில் எஞ்சியிருந்த ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் வெஸ்ட் இண்டீசுகாக விளையாடாமல் ஹன்ரட், பிக் பேஷ் போன்ற வெளிநாட்டு தொடர்களில் விளையாடி வருகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 4 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியை சந்தித்த போது அந்த இருவரும் ஹண்ட்ரட் தொடரில் விளையாடியதைப் பார்த்த பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் “தேசத்துக்காக விளையாடுமாறு யாரிடமும் நாங்கள் பிச்சை எடுக்கப் போவதில்லை” என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த உலகக்கோப்பை அணியில் ரசல், நரேன் ஆகிய இருவருமே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்கள். சாதாரண நாட்களில் தேசத்துக்காக விளையாடாத இவர்கள் உலக கோப்பையில் மட்டும் எதற்காக விளையாட வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எப்போதுமே இல்ல:
இருப்பினும் டி20 சூப்பர் ஸ்டார்களான ரசல் மற்றும் நரேன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் குழப்பமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் பார்ம் மற்றும் இதர நாட்களில் தேர்வுக்காக தங்களது பெயரை கொடுக்காத ரசல் மற்றும் ரசல் ஆகியோரை கடந்து சென்று விட்டதாக வெஸ்ட் இண்டீஸ் வாரிய தலைவர் டேஷ்மண்ட் ஹய்ன்ஸ் அறிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே ஆண்ட்ரே ரசல் உடன் நாங்கள் விவாதித்தோம். இருப்பினும் நாங்கள் திருப்தியடையவில்லை. எங்களுக்காக செயல்படாத அவரை அணிக்கான போட்டியில் நாங்கள் பார்க்க விரும்பவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் ஆன்ட்ரே ரசல் விஷயத்தில் நாங்கள் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டோம். அத்துடன் நல்ல ஃபார்மில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுபவரை தேடுகிறோம். அதே போல் சுனில் நரேன் எங்களுக்காக விளையாடுவதற்கான ஆர்வத்தை காட்டியதாக நான் பார்க்கவில்லை. மேலும் அவருடன் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேசியதாக செய்திகள் வெளியானது”

“ஆனால் வெஸ்ட் இண்டீசுக்காக விளையாட அவர் ஆர்வத்துடன் இல்லை என்று நான் அறிந்து கொண்டேன். மறுபுறம் எவின் லெவிஸ் எங்களுக்காக விளையாட ஆர்வம் தெரிவித்ததால் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று கூறினார். மேலும் தேசத்துக்காக விளையாடவர்களை கடந்து செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்த அவர் இனிமேல் ரசல் மற்றும் நரேன் ஆகியோருக்கு எப்போதும் வாய்ப்பில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.

Advertisement