நாங்க ஒன்னும் அந்த டீம் இல்ல. உங்ககிட்ட அடி வாங்க, இங்கிலாந்தை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – முழுவிவரம் இதோ

BEN Stokes Jasprit Bumrah IND vs ENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 12-ஆம் தேதியன்று துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மிரட்டலாக செயல்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்து. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் நெருப்பான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரில் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஆகிய 2 நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

போதாக்குறைக்கு அடுத்த ஓவரிலேயே முகமது ஷமியின் பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் கோல்டன் டக் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்தை காப்பாற்ற முயன்ற மொயின் அலியை 14 (18) ரன்களிலும் கேப்டன் ஜோஸ் பட்லரை 30 (32) ரன்களிலும் மீண்டும் காலி செய்த ஜஸ்பிரித் பும்ரா நங்கூரத்தை போட விடாமல் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதன் காரணமாக 100 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து டேவிட் வில்லி 21, கார்ஸ் 15 என பவுலர்கள் எடுத்த கணிசமான ரன்களால் தப்பினாலும் 25.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து தலை குனிந்தது.

- Advertisement -

இந்தியா மாஸ்:
அந்த அளவுக்கு எரிமலையாக பந்துவீசிய இந்தியாவின் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும் முகமது சமி 3 விக்கெட்டும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவானுடன் கைகோர்த்த ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை சேர்த்தார். இதில் ஒருபுறம் மெதுவாக பேட்டிங் செய்த தவான் 4 பவுண்டரியுடன் 31* (54) ரன்கள் எடுக்க மறுபுறம் ஏற்கனவே நொறுங்கிப் போன இங்கிலாந்தை வெளுத்து வாங்கிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76* (58) ரன்கள் குவித்து சூப்பர் பினிசிங் கொடுத்தார். அதனால் 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டிப் பிடித்து வென்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

மறுபுறம் சொந்த மண்ணில் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், ரூட், ஸ்டோக்ஸ் என தரமான நட்சத்திர வீரர்களை கொண்ட இங்கிலாந்து வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தலைமையில் முதலாவதாக நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை அசால்டாக சேசிங் செய்து தொடரை சமன் செய்த இங்கிலாந்து இந்தியாவுக்கு வரலாற்று தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

திணறும் இங்கிலாந்து:
அதனால் அதன்பின் நடக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் அந்த அணியே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலைமையில் இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றி 2019 உலக கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன் ஓய்வுக்குப் பின் புதிய கேப்டனாக முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் அறிவிக்கப்பட்டார். அதன் காரணமாக இந்தியா மீண்டும் மண்ணை கவ்வும் என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எகத்தாளமாக பேசினர். ஆனால் அதற்கெல்லாம் சளைக்காத இந்தியா கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதுமே பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்டு 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரை வென்று பழி தீர்த்தது.

அந்த நிலைமையில் துவங்கிய ஒருநாள் தொடரில் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ போன்ற முக்கிய வீரர்கள் இணைந்ததால் மேலும் வலுவடைந்து இங்கிலாந்து முதல் போட்டியிலேயே இப்படி மண்ணைக் கவ்வியுள்ளதை பார்க்கும் ரசிகர்கள் பேசாமல் நெதர்லாந்துக்கு எதிராக இன்னொரு தொடரில் போய் விளையாடுங்கள் என்று அந்த அணியை சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர். ஏனெனில் கடந்த மாதம் கத்துக்குட்டியான நெதர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.

கலாய்க்கும் ரசிகர்கள்:
அதைவிட முதல் போட்டியில் கத்துக்குட்டி என்றும் பார்க்காமல் கொஞ்சமும் கருணை காட்டாமல் நெதர்லாந்து பவுலர்களை கதறகதற களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் சரமாரியாக அடித்ததால் 498 ரன்கள் குவித்த இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து தனது சொந்த சாதனை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது.

ஆனால் வலுவான இந்தியாவுக்கு எதிராக அதுவும் சொந்த மண்ணில் கூட அந்த அணியின் ஆட்டம் செல்லுபடியாகாவில்லை. அப்படி இருக்க ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை சேசிங் செய்து விட்டோம் என்பதற்காக கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை மாற்றி எழுதப்போவதாக வாய்ச்சவடால் விட்ட இங்கிலாந்து தற்போது பல்ப் வாங்கியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement