சுயநலமின்றி டிகே’வை மதித்த விராட் கோலியின் செயலால் கிடைத்த வெற்றி – ரசிகர்கள் பாராட்டும் வீடியோ உள்ளே

Virat Kohli Dinesh Karthik
- Advertisement -

அசாம் மாநிலம் கவுகாத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அக்டோபர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது. உலக கோப்பைக்கு முன்பாக பங்கேற்கும் இந்த கடைசி தொடரின் முதல் போட்டியில் வென்று ஏற்கனவே 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 237/3 ரன்கள் சேர்த்தது. அவ்வளவு பெரிய ரன்களை குவிக்க 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான அடித்தளமிட்ட கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49 (37) ரன்களும் அவருடன் அதிரடி காட்டிய கேஎல் ராகுல் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதை தொடக்கத்தை கச்சிதமாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ் 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 5 சிக்சருடன் அதிரடியாக 61 (22) ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவருடன் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுக்க இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17* (7)ரன்கள் எடுத்து ஃபினிசிங் கொடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அதை தொடர்ந்து 238 என்ற கடினமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தால் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய போராடிய மார்க்ரம் 33 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 47/3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கி மற்றொரு தொடக்க வீரர் டீ காக் உடன் கைகோர்த்த டேவிட் மில்லர் இந்திய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

நேரம் செல்லசெல்ல அதிரடியை அதிகப்படுத்தி கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றிக்கு போராடிய இந்த ஜோடியில் டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்களும் டேவிட் மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் அதிரடியான சதமடித்து 106* (47) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 221/3 ரன்களை மட்டுமே எடுத்த தென்ஆப்பிரிக்கா போராடி தோற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தடுமாறிய இந்தியா பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டதால் வெற்றியை சுவைத்து 2 – 0* (3) என்ற கணக்கில் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:
இப்போட்டியில் பந்து வீச்சு சொதப்பலாக அமைந்ததால் இந்திய பேட்ஸ்மேன்கள் குவித்த ரன்களே இறுதியில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. அதிலும் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அடித்த அந்த 17* (7) ரன்கள் தான் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற துருப்புச் சீட்டாக அமைந்தது. ஆனால் அந்த ரன்களை எடுக்க விராட் கோலியின் சுயநலமற்ற முடிவு தான் முக்கிய காரணமாக அமைந்தது. ஆம் சூரியகுமாருடன் அதிரடி காட்டிய விராட் கோலி 19வது ஓவரின் முடிவில் 49* (28) ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது சூர்யா அவுட்டானதும் களமிறங்கிய தினேஷ் கார்த்தி கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத நிலையில் 2வது பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின் ஒரு டாட் ஒய்ட் பந்துக்குப்பின் 4வது பந்தில் மீண்டும் அவர் சிக்ஸர் பறக்கவிட்டார். அப்போது 49* ரன்களில் இருக்கும் 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதற்காக 5வது பந்துக்கு முன் “நான் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக் கொடுக்கட்டுமா” என்று தினேஷ் கார்த்திக் தாமாக விராட் கோலியிடம் சென்று கேட்டார்.

- Advertisement -

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த விராட் கோலி 50 ரன்கள் தொடுவதை விட இந்தியாவுக்கு நல்ல பினிஷிங் தேவை என்பதால் அதை செய்யுமாறு பதிலளித்தார். அதனால் நெகிழ்ச்சியுடன் திரும்பி சென்ற தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து கடைசி பந்தில் பைஸ் எடுத்து இந்தியாவை 237 ரன்களை எட்ட வைத்தார்.

இதையும் படிங்க : IND vs SA : தோனி, கோலியை அசால்ட்டாக மிஞ்சிய ஹிட்மேன் – படைத்த பிரம்மாண்ட சாதனைகள் இதோ

அந்த சமயத்தில் நினைத்திருந்தால் தினேஷ் கார்த்திக் கொடுத்த வாய்ப்பில் மற்றுமொரு அரைசதம் அடித்து சொந்த சாதனையை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் அதை செய்யாத விராட் கோலி தேசத்தின் நலனுக்காக சுயநலமின்றி நடந்து கொண்டது அனைத்து ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைக்கிறது.

Advertisement