IND vs NED : நானா இந்த ஷாட் அடிச்சேன், தங்களது ஆட்டத்தை ஒருவருக்கொருவர் கொண்டாடிய விராட் – சூர்யா, 2 வீடியோ இதோ

Virat Kohli Suryakumar Yadav
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் திரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து தோற்கடித்தது. அதே புத்துணர்ச்சியுடன் அக்டோபர் 27ஆம் தேதியன்று கத்துக்குட்டி நெதர்லாந்தை தன்னுடைய 2வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. புகழ் பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 179/2 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் ராகுல் 9 (12) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றினாலும் அடுத்த களமிறங்கிய விராட் கோலியுடன் 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 (39) ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது களமிறங்கிய சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டர் 2 சிக்ஸருடன் 62* (44) ரன்கள் விளாசினார். மறுபுறம் அவரை விட அட்டகாசமாக செயல்பட்ட சூரியகுமார் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51* (25) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

- Advertisement -

அசத்திய சூர்யா – விராட்:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெற்றியையும் கோட்டை விட்டது. இறுதிவரை ஆல் அவுட்டாவதை தவிர்த்த அந்த அணி 20 ஓவர்களில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக பந்து வீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். இந்த வெற்றியால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்ற இந்தியா முதலிடத்தில் ஜொலிக்கிறது.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றின் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலி அதே பார்மில் இப்போட்டியில் நெதர்லாந்தையும் வெளுத்து வாங்கி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஹாரீஸ் வீசிய 19வது ஓவரில் அவர் அடித்த சிக்ஸர்களை பார்த்து உலகமே வியந்த நிலையில் இப்போட்டியில் ப்ரெட் க்ளாஸென் வீசிய 17வது ஓவரின் 3வது பந்தை லேசாக ஒதுங்கி அடித்த விராட் கோலி டீப் எக்ஸ்ட்ரா கவர் திசை மீது சிக்ஸராக பறக்கவிட்டார்.

- Advertisement -

அதை பார்த்து மைதானத்தில் இருந்து அத்தனை ரசிகர்களும் ஆச்சரியமடைந்த நிலையில் விராட் கோலியே நாம் தான் இந்த ஷாட் அடித்தோமா என்ற வகையில் ஆச்சரியமான ரியாக்சன் கொடுத்தார். ஃபிளாட்டாக பறந்து சிக்ஸராக மாறி ரசிகர்களை மகிழ்வித்த அந்த பந்தை எதிர்ப்புறமிருந்த சூரியகுமார் யாதவும் கைதட்டி பாராட்டினார்.

மறுபுறம் தனக்கே உரித்தான ஸ்டைலில் களமிறங்கியது முதலே தெறிக்க விடும் பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லோகன் வன் பீக் வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் பேக்வேர்ட் ஸ்கொயர் திசையில் ஸ்டைலாக அசால்ட்டான சிக்ஸரை பறக்க விட்டு ஸ்டைலாக அரை சதமடித்து இந்தியாவுக்கு சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். அதைப் பார்த்த வர்ணையாளர்களும் ரசிகர்களும் என்ன ஒரு அழகான ஷாட் என்று பாராட்டியதை போலவே எதிர்ப்புறமிருந்த விராட் கோலி நேராக அவரை கட்டிப்பிடித்து பாராட்டினார்.

அதோடு நிற்காமல் குழந்தையைப் போல் 2 கைகளையும் தூக்கி இந்த அற்புதமான சிக்சரை கொண்டாடுமாறு சொன்னார். அதை ஏற்று சூரியகுமாரும் 2 கைகளை உயர்த்தி தாம் அடித்த சிக்சரை கொண்டாடிய போது அவருடைய தலையில் தட்டி விராட் கோலி மேலும் பாராட்டியது இந்திய ரசிகர்களின் நெஞ்சத்தை தொட்டது. இறுதியில் இந்தியா வென்ற நிலையில் சூரியமார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement