நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 306/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 72 (77) ரன்களும் சுப்மன் கில் 50 (65) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 80 (76) ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 307 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, டேவோன் கான்வே 24, டார்ல் மிட்சேல் 11 என முக்கிய வீரர்கள் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 88/3 என தடுமாறிய அந்த அணிக்கு 4வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று கடைசி வரை அவுட்டாகாமல் 221 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் வில்லியம்சன் 94* (98) ரன்களும் டாம் லாதம் சதமடித்து 145* (104) ரன்களும் விளாசி 47.1 ஓவரிலேயே 309/3 ரன்களை எடுக்க வைத்து 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
மிரட்டிய உம்ரான்:
அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுகமாக களமிறங்கிய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக 2021, 2022 ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் மிரட்டலாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை பறக்க விட்ட அவர் இந்திய மண்ணிலேயே சக்கை போடு போடுகிறார் என்றால் வேகத்துக்கு கை கொடுக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் நிச்சயம் அசத்துவார் என்பதால் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டுமென்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும் நல்ல லைன், லென்த் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தாமல் இருந்த அவர் வேகத்துக்கு நிகரான ரன்களை வாரி வழங்கினார். அந்த நிலையில் ஜூலை மாதம் நடைபெற்ற அயர்லாந்து டி20 தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்டு கடைசி ஓவரில் 4 ரன்கள் த்ரில் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த அவர் இங்கிலாந்து மண்ணில் நடந்த டி20 தொடரில் தன்னுடைய 2வது போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கினார்.
அப்படி 2 போட்டிகளில் ரன்களை வழங்கியதால் இவர் அவ்வளவு தான் என்று தப்பு கணக்கு போட்ட தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டது. ரசிகர்களும் கூட அப்படியே நினைத்து வரும் நிலையில் சில முன்னாள் ஜாம்பவான் வீரர்களின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் டி20 உலக கோப்பையில் சந்தித்த தோல்வி மற்றும் சமீபத்திய உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டதால் மீண்டும் இந்திய அணிக்குள் வந்துள்ள உம்ரான் மாலிக் இந்த அறிமுக ஒருநாள் போட்டியில் அசத்தலாகவே செயல்பட்டுள்ளார்.
we have a feeling we're going to be fans of Umran Malik a while! 💯#NZvINDonPrime #CricketOnPrime pic.twitter.com/3SHw4ZUjBm
— prime video IN (@PrimeVideoIN) November 25, 2022
குறிப்பாக முதல் போட்டியிலேயே 10 ஓவரில் 66 ரன்களை 6.60 என்ற ஓரளவு சிறப்பான எக்கனாமியில் எடுத்த அவர் டேவோன் கான்வே மற்றும் டார்ல் மிட்சேல் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து சிறப்பாக செயல்பட்டார். சொல்லப்போனால் அர்ஷிதீப் சிங், ஷார்துல் தாகூர் ஆகிய 2 இதர வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் முழுமையான 10 ஓவர்களை வீசிய உம்ரான் மாலிக் அவர்களை காட்டிலும் குறைவான எக்கனாமியில் பந்து வீசி அசத்தினார் என்றே சொல்லலாம்.
ஏனெனில் இப்போட்டி நடைபெற்ற ஈடன் பார்க்க மைதானம் அளவில் மிக சிறியது என்ற நிலையில் அனைவரது கணக்குப்படி அவர் 80 ரன்களை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் வீசிய அவர் கான்வே, மிட்சேல் ஆகியோரை தனது வேகத்தால் வீழ்த்தி மிரட்டலாக பந்து வீசினார். எனவே ஆரம்பத்தில் யாருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் இவருக்கு தொடர்ச்சியான ஆதரவும் நல்ல பயிற்சியும் கொடுத்தால் நிச்சயம் இவரிடம் இருக்கும் வேகத்திற்கு வருங்காலங்களில் மிரட்டல் பவுலராக வருவார் என்பதில் சந்தேகமில்லை.



