சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆரம்பத்திலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை கத்துக்குட்டி நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீசை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து எதிர்பாரா தொடக்கத்தை கொடுத்தன. அதனால் ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு முழு மூச்சுடன் ஆக்ரோசமாக மோதிக் கொள்வார்கள்.
அதனால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் கடந்த 10 வருடங்களாக எல்லைப் பிரச்சனை காரணமாக ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே 2 வருடத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகின்றன. அதனால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு இப்போதெல்லாம் எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்துள்ள நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக தோற்று வந்த மோசமான கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது.
தெறிக்கவிடும் ராக்:
அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்று பதிலடி கொடுத்தாலும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் தோல்வியடைந்து பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறியது. எனவே எஞ்சியிருக்கும் அந்த பழைய கணக்குகளுக்கு இம்முறை மெல்போர்ன் நகரில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் இந்திய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் கடந்த முறை வரலாற்று தோல்வியை சந்திக்க ஆட்டநாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றிய ஷாஹீன் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்துள்ளார்.
அவரது வருகையால் பலமடைந்துள்ள பாகிஸ்தான் சென்றமுறை போலவே இம்முறையும் இந்தியாவை தோற்கடிக்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காக இவ்விரு அணிகள் மோதிய பயிற்சி போட்டிகளில் வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்த நிலையில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. எனவே வெல்லப் போவது யார் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டிக்கு தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் மற்றும் WWE மல்யுத்த வீரர் “தி ராக்” கூறியுள்ளார்.
பொதுவாகவே அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமில்லாததால் அங்குள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையை பெரும்பாலும் கவனிப்பதில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் பைனல் உட்பட 45 போட்டிகள் நடைபெற்றாலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டி மட்டும் கடந்த ஒரு வருடமாகவே எதிர்பார்த்து அதிகமாக காணப்படுவதால் அது பற்றி ராக் அறிந்ததாக தெரிகிறது.
குறிப்பாக சண்டையும், சவாலும் மிகுந்த இவ்விரு அணிகள் மோதும் போட்டியை பற்றியும் அதை தங்களது உயிராகவும் உணர்வாகவும் நினைக்கும் இரு நாட்டு மக்களை பற்றியும் அறிந்து கொண்ட அவர் அதனால் மிகவும் கவர்ந்து இப்போட்டிக்கு தாமும் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். ஏனெனில் WWE களத்தில் மிகவும் சவாலான வீரர்களுடன் மோதி வெல்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்சமயத்தில் அவருடைய ஹாலிவுட் திரைப்படமான “பிளாக் ஆடம்” திரைக்கு வரும் நிலையில் அதே போலவே இந்த போட்டிக்காக காத்திருப்பதாக கூறும் ராக் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு.
“மிகப்பெரிய போட்டியாளர்கள் மோதும் போது உலகமே அசையாமல் நிற்கும். இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டியது. இது இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் மிகப்பெரிய போட்டிக்கான நேரம்” என்று தமக்கே உரித்தான தெறிக்கவிடும் பாணியில் பேசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார். இதை தொடர்ந்து அக்டோபர் 23ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் நகரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.



