ஜாம்பவான் கவாஸ்கரிடம் பிறந்தநாள் பரிசு பெற்ற பாகிஸ்தான் கேப்டன் – உரையாடல்களும் வீடியோவும் இதோ

SUnil Gavaskar Babar Azam
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு நாட்களிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீசை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனால் ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பு இரு மடங்கு அதிகமாகியுள்ளது. அதில் கடந்த 1992 முதல் உலகக் கோப்பைகளில் தொடர்ச்சியாக தோல்வியை பரிசளித்த வந்த இந்தியாவை கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தடுத்து நிறுத்திய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைத்தது.

அந்த நிலையில் அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் அதற்கு பதிலடி கொடுத்தாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் தோல்வியடைந்த இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. எனவே அந்த 2 தோல்விகளுக்கும் இம்முறை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

பிறந்தநாள் பரிசு:
அப்படி அனல் தெறிக்கப் போகும் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பிரிஸ்பேன் நகரில் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். முன்னதாக இந்த உலக கோப்பை துவங்கிய அக்டோபர் 16ஆம் தேதியன்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த சில வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என அனைவராலும் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்துள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதை விட இந்த உலகக் கோப்பைக்காக நடந்த புகைப்பட சூட்டிங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அவரை கேக் வெட்ட வைத்து வாழ்த்து தெரிவித்த போது ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்த கேப்டன்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அன்றைய நாளின் இரவில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அந்நாட்டு வாரியம் சிறப்பு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தது. ஆச்சரியப்படும் வகையில் அதே ஹோட்டலில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தங்கியிருந்ததை அறிந்த பாகிஸ்தான் நிர்வாகம் அவரையும் பார்ட்டிக்கு அழைத்தது.

- Advertisement -

அதிலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய பயிற்சியாளர் யூசுப் யுகானா அவரை அழைத்து வந்து பாபர் அசாமிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது “ஹேப்பி பர்த்டே” என்று பாபர் அசாமுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் அவருடன் பேசி மகிழ்ந்தார். அத்துடன் சக்லைன் முஷ்டக் உள்ளிட்ட இதர முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுடன் பேசி மகிழ்ந்த அவர் யூசுப் யுகானாவிடம் “இப்போதும் நீங்கள் தானே 1800 ரன்களை அடித்து ஒரு வருடத்தில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளீர்கள்?” என்று மறவாமல் கேட்டார்.

2006இல் 11 போட்டிகளில் 1788 ரன்களை குவித்த யுகானா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை இப்போதும் படைத்துள்ளார். அதை சரியாக நினைவுப்படுத்தி பேசிய அவர் அதன்பின் பாபர் அசாமுக்கு கொடுத்த ஆலோசனைகள் பின்வருமாறு. “எந்த வகையான கிரிக்கெட்டிலும் ஷாட் செலக்சன் சரியாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதிலும் குறிப்பாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களது ஷாட்டை தேர்வு செய்தால் பேட்டிங்கில் பிரச்சினை வராது” என்று கூறினார்.

இதையும் படிங்க : ரோல் மாடலே நீங்கதான் – பாக் வீரருக்கு ஆலோசனை வழங்கி பந்து வீசிய ஷமி – ரசிகர்கள் நெகிழும் வீடியோ இதோ

அதை மாணவனைப் போல் ஆர்வத்துடன் அமைதியாக கேட்ட பாபர் அசாம் இறுதியில் ஒரு தொப்பியில் அவரது ஆட்டோகிராப் வாங்கி ரசிகனை போல் அவரது அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த வகையில் பாகிஸ்தான் அணியுடன் இணைந்து தங்களது கேப்டனுக்கு ஆலோசனைகளை தெரிவித்த சுனில் கவாஸ்கருக்கு அந்நாட்டு ரசிகர்கள் நன்றியை தெரிவிக்கின்றனர். இப்படி பரம எதிரிகள் என்பதையும் தாண்டி இரு நாட்டு நட்சத்திரங்கள் நட்பு பாராட்டிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement