வீடியோ : குரு தோனியை சுற்றி நின்று ஆர்வத்துடன் பாடம் கற்ற ஹைதெராபாத் இளம் வீரர்கள் – ரெய்னா நெகிழ்ச்சி

MS dhoni SRh
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது. தமிழக ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்த வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாற்றமாக செயல்பட்டு 20 ஓவர்களில் 134/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹரி ப்ரூக் 18 (13), ராகுல் திரிபாதி 21 (21), கேப்டன் ஐடன் மார்க்ரம் 12 (12), ஹென்றிச் க்ளாஸென் 17 (16), மயங் அகர்வால் 17 (16) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 34 (26) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 135 ரன்களை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே நிதானமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு டேவோன் கான்வேயுடன் இணைந்து 87 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ருதுராஜ் கைக்வாட் 35 (30) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

குரு சிஷ்யர்கள்:
அந்த நிலைமையில் வந்த ரகானே 9 (10) ராயுடு 9 (9) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து ஹைதராபாத் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட டேவோன் கான்வே அரைசதம் அடித்து 12 பவுண்டரி 1 சிக்சருடன் 77* (57) ரன்கள் குவித்து 18.4 ஓவரிலேயே சென்னையை வெற்றி பெற வைத்தார். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை.

அப்படி சிறப்பாக நடைபெற்ற அந்தப் போட்டி முடிந்ததுமே சென்னை கேப்டன் எம்எஸ் தோனியை சூழ்ந்து கொண்ட ஹைதராபாத் இளம் வீரர்கள் தங்களுக்கு தேவையான சில முக்கிய ஆலோசனை குறிப்புகளை சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று வரலாற்றின் மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனியிடம் பொதுவாகவே ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் எதிரணியில் இருக்கும் இளம் வீரர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை கேட்பது வழக்கமாகும்.

- Advertisement -

அதற்கு தோனியும் மிகுந்த ஆர்வத்துடன் தமக்கு தெரிந்த அனைத்தையும் இளம் வீரர்களுக்கு சொல்லி கொடுப்பதை அனைவருமே அறிவோம். ஆனால் இந்த போட்டியில் இளம் எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், அப்துல் சமட், அபிஷேக் சர்மா, மயங் டங்கர் என ஹைதராபாத் அணியில் இருக்கும் கிட்டத்தட்ட அனைத்து இளம் வீரர்களும் ஒன்று சேர்ந்து தோனியை சுற்றி நின்று முக்கிய ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

கேப்டன்ஷிப் மட்டுமல்லாமல் பேட்டிங், ஃபீல்டிங் உட்பட கிரிக்கெட்டின் பல துறைகளில் நுணுக்கமான விஷயங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் தோனி தம்முடைய அனுபவங்களை இளம் வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்த அந்த தருணம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. குறிப்பாக “குருவை சுற்றி நிறைய சிஷ்யர்கள் ஆலோசனை கேட்பதை பாருங்கள்” என்று அந்த தருணத்தை முன்னாள் ஜிம்பாப்வே வீரர் பொம்மி மப்வாங்கா நேரலையில் வர்ணனை செய்து பாராட்டினார்.

- Advertisement -

அதே போல இளம்பிரர்களுக்கு ஆலோசனை வழங்கிய தோனியை சுரேஷ் ரெய்னாவும் ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அந்த நிலையில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சென்னை தன்னுடைய அடுத்த போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: CSK vs SRH : இப்படி ஒரு மோசமான தோல்வியை நாங்க சந்திக்க இதுவே காரணம் – எய்டன் மார்க்ரம் வருத்தம்

மறுபுறம் 6 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் ஹைதராபாத் அடுத்ததாக ஏப்ரல் 24ஆம் தேதி தன்னுடைய அடுத்த போட்டியில் டெல்லியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement